தங்களுடன் வேலைபார்க்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம்கோரி
நேற்று டி.பி.ஐ. வளாகத்தில் 6–வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
உண்ணாவிரதம் இருந்த சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு
குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னை டி.பி.ஐ.
வளாகத்தில் உள்ள 10 மாடி கட்டிடம் முன்பு கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம்
இருந்து வருகிறார்கள்.
உண்ணாவிரதம் இருந்த மாநில பொதுச்செயலாளர்
ஜே.ராபர்ட் நேற்று மயக்கம் அடைந்து படுத்துவிட்டார். அதனால் அவரை 108
ஆம்புலன்சில் அழைத்துச்சென்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ஏற்பாடு
செய்யப்பட்டது. ஆனால் அவர் பிடிவாதமாக ஆம்புலன்சில் ஏற மறுத்துவிட்டார்.
எனவே
அவருக்கு உண்ணாவிரதம் இருந்த இடத்திலேயே குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அந்த
பாட்டிலை சக ஆசிரியர் ஒருவர் கையில் பிடித்தபடி உட்கார்ந்து இருந்தார்.
இந்த போராட்டம் குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:–
மாநிலத்திற்குள்ளேயே முரண்பாடு
31–5–2009–ந்தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை
ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8 ஆயிரத்து 370 என்றும், அதற்கு
பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5
ஆயிரத்து 200 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் நாங்கள் அந்த இடைநிலை
ஆசிரியர்களை விட ரூ.3 ஆயிரத்து 170 அடிப்படை சம்பளத்தில் குறைவாக
வாங்குகிறோம்.
இவ்வாறு ஒரு மாநிலத்திலேயே சம்பளத்தில் முரண்பாடு
உள்ளது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் நாங்கள் கேட்கவில்லை. இந்த
கோரிக்கைக்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விட்டோம்.
பள்ளிக்கல்வி முதன்மை செயலாளரை பார்த்து முறையிட்டோம். ஆனால் எங்கள்
கோரிக்கை நிறைவேறவில்லை.
இனிமேல் 7–வது ஊதியக்குழு வர உள்ளது. அது
அமல்படுத்தும்போது ஏற்கனவே உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் எங்களுக்கும்
சம்பளத்தில் அதிக வித்தியாசம் ஏற்படும். எனவே அதற்குள்ளாக எங்களுக்கு ஊதிய
முரண்பாடுகளை களையவேண்டும். இதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
அதுவரை உண்ணாவிரத போராட்டம் தொடரும். உயிரைப்பற்றி கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.