இணைய வழி, செல்லிடப்பேசி மூலமாக அஞ்சல் வங்கிச் சேவைகளை (Mobile &
Internet Banking) அறிமுகம் செய்வதற்கான முதல் கட்டப் பரிசோதனை நடைபெற்று
வருகிறது.நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்களும்
கணினிமயமாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வங்கிச் சேவை "கோர் பேங்கிங்' (Core
Banking Solution) வசதிக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அஞ்சல்
துறையில் "கோர் பேங்கிங்' வசதியை ஏற்படுத்த "எங்கேயும், எப்போதும்' என்ற
பெயரில் மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, ரூ.800
கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. "கோர் பேங்கிங்' வசதிக்கும் மாறும்
அஞ்சலகங்களில், எங்கிருந்தும் பணப் பரிமாற்றம், பணம் எடுத்தல் உள்ளிட்ட
பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெற முடியும்.முழுமையான வங்கிச் சேவைகளில் ஈடுபட இந்திய அஞ்சல் துறை ரிசர்வ் வங்கியிடம் உரிமம் கோரியுள்ளது. வங்கிகள் போன்று, அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்கும் முதல் கட்டப் பணிகளை அஞ்சல் துறை தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, அஞ்சலகங்கள் ஒருங்கிணைந்த சேவைக்கு மாற்றம், தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர மையங்கள் திறப்பு, சேமிப்புக் கணக்குகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடுகள் கணினிமயமாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில், இணைய வழி, செல்லிடப்பேசி மூலமாக அஞ்சல் வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளையும் அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் சார்லஸ் லோபோ, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் ஆகியோர் கூறியதாவது:
இணைய வழி, செல்லிடப்பேசி மூலமாக தொலைபேசி, மின் கட்டணம் செலுத்துதல், பணப் பரிமாற்றம், முதலீடு செய்தல், கடன் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வங்கி சார்ந்த நடவடிக்கைகளில், 70 சதவீதத்துக்கும் மேல் இணைய வழி, செல்லிடப்பேசி மூலமாகவே நடைபெறுகின்றன.
அந்த வரிசையில், இணையதளம் (Online Banking), செல்லிடப்பேசி (Mobile banking) அஞ்சல் வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான முதல் கட்டப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து உரிமம் கிடைக்கப் பெற்றதும், இந்த வசதிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
உரிமம் கிடைக்கும் வரை இணைய வழி, செல்லிடப்பேசி அஞ்சல் வங்கிச் சேவையை அமல்படுத்துவதற்கான பரிசோதனை தொடர்ந்து நடைபெறும். முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்ததும், அஞ்சல் நிலையங்களுக்கு இடையே பணப் பரிமாற்றம், இருப்பு விவரம் அறிதல், வேறு வங்கிகளுக்கு பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அஞ்சலக வாடிக்கையாளர்களும் பெற முடியும். வங்கிகள் இணைய, செல்லிடப்பேசி வங்கிச் சேவையில் அளிக்கும் அனைத்து வசதிகளும் அஞ்சல் இணைய, செல்லிடப்பேசி வங்கிச் சேவைகளிலும் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்றனர் அவர்கள்.