இந்த நிலையில், பொறியியல் விண்ணப்ப விநியோகத் தேதி அறிவிக்கப்பட்டதை குறிப்பிட்டு, மருத்துவக் கல்லூரிகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடர்பான கோரிக்கை மருத்துவக் கல்வி இயக்கத்தில் இருந்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இணையதள விண்ணப்பங்கள்:
மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து மட்டும் பதிவிறக்கம் செய்யும் திட்டம் உள்ளது. ஆனால், கிராமப்புற மாணவர்களைக் கருத்தில் கொண்டு நேரடி விண்ணப்ப விநியோகம், இணையதள விண்ணப்ப விநியோகம் ஆகிய இரண்டையும் மேற்கொள்ளப் போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.2015-ஆம் ஆண்டில் மே 11-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. இந்த ஆண்டில் அதை மே முதல் வாரத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது: மருத்துவக் கல்லூரி விண்ணப்ப விநியோகம் தொடர்பாக அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். தமிழக அரசிடம் இருந்து இந்த வாரத்தில் உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பிற ஏற்பாடுகள் நடைபெற்று மே முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அவர்கள் தெரிவித்தனர்.








