திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ஆனந்த் ஐ.ஏ.எஸ்., பணிக்கு
தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இவரது தந்தை பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.,
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.ராஜகுரு. தாயார் ஆர்.மலர்க்கொடி,
சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.
பெங்களூ, சென்னையில்
'அரிசன்ட் டெக்னாலஜி' நிறுவனத்தில் பணிபுரிந்த ஆனந்த் பணியில் இருந்து
விலகி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். தற்போது இந்திய அளவில்
621வது இடத்தில் தேர்வாகி உள்ளார்.
ஆனந்த், பள்ளிப் படிப்பை
என்.எஸ்.வி.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அந்தியூரில் பிளஸ் 2
முடித்தார். மதுரை தியாகராஜர் கல்லுாரியில் பி.இ., கணினி அறிவியல்
படித்தார்.
சென்னை 'டைம்', பெங்களூரூ 'இன்சைட்' ஐ.ஏ.எஸ்., பயிற்சி
மையங்களில் பயின்றார். 2012ல் டில்லியில் முதல்நிலைத் தேர்வில் தோல்வி.
2013ல் முதல்நிலை தேர்வை கடந்து பொதுத் தேர்வில் தோல்வி. மீண்டும் 2013ல்
இந்திய வனத்துறை முதல்நிலை பொதுத் தேர்வில் வென்றார். ஆனால் நேர்காணலில்
தோல்வி அடைந்தார்.பின் 2014ல் நடந்த ஐ.ஏ.எஸ்., பணி நேர்காணலில்
தோல்விடைந்தார். கடந்த 2015 தேர்வில் பங்கேற்று லட்சியத்தை எட்டினார்.
அவர்
கூறுகையில், ''எனது பெற்றோர் செஞ்சிலுவை சங்கம் மூலம் 20 ஆண்டுகளாக சமூக
சேவை செய்கிறார்கள். அதன் உந்துதலால் மக்களுக்கு சேவையில் ஆர்வம்
ஏற்பட்டது. அதற்கு ஐ.ஏ.எஸ்., பணி எண்ணம் வந்தது.நான்கு முறை தோல்வி
அடைந்ததை பற்றி நான் கவலைப்பட வில்லை. கடுமையான உழைப்பு என்றும் தோற்பது
இல்லை. அதற்கு உறுதியான மனநிலைதான் தேவை,'' என்றார்.