மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற
விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு
நிறுத்தி வைத்துள்ளது.தமிழகத்தில், 2011 முதல் சமச்சீர் கல்வி பாடத்திட்டம்
அமல்படுத்தப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தின் தரம் குறித்து கல்வியாளர்கள்
பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சர்வதேச அளவிலான மற்ற
பாடத்திட்டங்களை விட மிகவும் குறைந்த தரத்தில் உள்ளதால் தமிழக
பாடத்திட்டங்களை மாற்றவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து,
தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பல பள்ளிகள், மத்திய அரசின்
கல்வித் திட்டமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இந்த
வகையில், சி.பி.எஸ்.இ., இணைப்பு அந்தஸ்து பெற, உட்கட்டமைப்புரீதியாக, தமிழக
அரசிடம் தடையில்லா சான்றான, என்.ஒ.சி., பெற வேண்டும். ஆனால், இந்த
என்.ஒ.சி.,யைவழங்குவதில் பள்ளிகளுக்கும், கல்வித் துறைக்கும் இடையே
பெரியளவில் பேரம் நடப்பதாக கூறப்படுகிறது.குறிப்பாக, ஒரு பள்ளிக்கு,
என்.ஒ.சி., பெற வேண்டும் என்றால் உட்கட்டமைப்பு சரியாக இருந்தாலும்
இல்லாவிட்டாலும் பணம் கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.
இந்நிலையில்,
என்.ஒ.சி., கேட்டு விண்ணப்பித்த, 500க்கும்மேற்பட்ட பள்ளிகளுக்கான
விண்ணப்பங்களை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
உட்கட்டமைப்பு வசதியில்லை என்ற காரணத்தை கூறி, அவை நிறுத்தப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. ஆனால், உண்மை வேறுஎன்பதால் நீதிமன்றத்தில் முறையிட, அந்த
பள்ளிகள் முடிவுசெய்துள்ளன.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க
பொதுச் செயலர் ஆர்.நந்தகுமார் கூறியதாவது:சி.பி.எஸ்.இ.,க்கு மாற
விண்ணப்பித்த பல பள்ளிகள், ஆண்டுக்கணக்கில் தமிழக அரசிடம் சான்று வாங்க
முடியாமல் காத்துக் கிடக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை
இல்லை.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம்
விவரமாக பேசியுள்ளோம். என்.ஒ.சி., தேவையில்லை என, மத்திய அரசு விரைவில்
அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.