இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களுக்கு கழிவறை வசதி இல்லை. இதனால், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் ஊட்டக்குறைவு மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். பெண் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திறந்தவெளியையே பயன்படுத்த வேண்டியிருப்பதால், பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்ட்ராவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பொதுமக்கள் நலனுக்காக பொதுக் கழிப்பறைகளைக் கட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தில் பிரச்சாரம் செய்யும் அவர், இதுவரை 1824 கழிவறைகள் கட்டுவதற்கு உதவி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, “ஒரு நாள் நண்பனின் தங்கை திறந்தவெளியைப் பயன்படுத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாகினார். இது, என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் மூன்று மாதங்கள் தனியாகக் கட்டியது கடினமாக இருந்தது. பின், நான் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தேன். என் குடும்பம், நான் ஆசிரியர் பணியை மட்டுமே செய்யவேண்டும் என்று கூறினர். ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது எனது கடமை” என்றார்.
ஷஜபூர் கிராமத்தில் கழிவறைகளைக் கட்டி கிராம மக்களைப் பயன்படுத்தும்படி சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தினார். குறைவான பணத்தில் கழிவறைகளைக் கட்ட கடினமாக இருந்ததால் கிராமத்தில் உள்ள தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் உதவிமூலம் கழிவறைகளைக் கட்டிமுடித்தோம். ராஜ்குமார் ஒரு நல்ல ஆசிரியருக்கு சிறந்த முன்னுதாரணமாகச் செயல்படுகிறார் என்று மாவட்ட கலெக்டர் ராஜிவ் ஷர்மா பாராட்டினார்.









