குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை தரக்கூடாது என்று கவுகாத்தியில் நடைபெற்ற தேசிய சிறார் கருத்தரங்கில், புதுவையைச் சேர்ந்த சிறார்கள் வலியுறுத்தினர்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்து அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அண்மையில் நடைபெற்ற தேசிய சிறார் கருத்தரங்கில், புதுச்சேரி மாணவ, மாணவியர் 4 பேர் பங்கேற்று கருத்துகளை விவாதித்தனர்.
இக் கருத்தரங்கில் புதுச்சேரி அன்பாலயம் தொண்டு நிறுவன மாணவர்கள் 4 பேர் பங்கேற்றனர். இதில் குழந்தைத் தொழில், குழந்தைகள் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை கடத்தல், உடல் ரீதியான தண்டனை உள்ளிட்ட பிரச்னைகள் மற்றும் அதனை தடுப்பது குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் நாடு முழுவதிலுமிருந்து சிறார்கள் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக மாணவி காவ்யா கூறியது: நாடு முழுவதுமிருந்து 35 குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்றனர். குறிப்பாக குழந்தைகள் கடத்தல் தொடர்பான விவாதத்தில் நான் பங்கேற்றேன்.
குழந்தைகள் கடத்தல் பற்றி இதர குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். அத்துடன் குழந்தைகளின் உணர்வுகளை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தை உதவி எண் 1098 பற்றி அனைவரும் அறிவது அவசியம். பெற்றோரும் அறிய வேண்டும் என தெரிவித்தேன் என்றார்.
சத்யா சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த அனில் கூறியது: உடல் ரீதியான தண்டனை தொடர்பாக குறிப்பிட்டோம். முதலில் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை தரக்கூடாது. குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவ வேண்டும். குறிப்பாக குழந்தைகள் உரிமை பற்றி பெரியவர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.