தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வை, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது, கவலையளிக்கிறது.
மத்திய அரசு உத்தரவின்படி, 1-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தகுதித் தேர்வை நடத்தவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டப்படிப்பு முடித்தவர்கள், இத்தேர்வை எழுத முடியாமல் தவிக்கின்றனர்.
ஏற்கனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டு, 2016 வரை, இந்த தகுதி தேர்வை எழுத வழங்கப்பட்ட கால அவகாசமும், 1,665 ஆசிரியர்களுக்கு, நிறைவடையும் சூழ்நிலையில், தகுதித் தேர்வு அறிவிப்பை அ.தி.மு.க., அரசு வெளியிடாமல் இருப்பது, புதிராக உள்ளது.