பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அறிவியல் பாடங்களை எளிதில்
புரிந்து கொள்ளும் வகையில், நான்கு பரிமாண முறையில் படங்களை காட்டும்,
'மொபைல் போன் ஆப்' வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடங்களை எளிதில் புரிய
வைக்கும் வகையில், பல புதிய முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை
மேற்கொண்டுள்ளது.
இந்த வரிசையில், நான்கு பரிமாணங்களில்
படங்களை காட்டும்,மொபைல் போன் ஆப் மற்றும் காணொலி காட்சி குறுந்தகடுகளை,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆப்,
ஆண்ட்ராய்ட் போனில், tnschools live என்ற பெயரில், கூகுள் பிளே ஸ்டோரில்
பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம். இதுகுறித்து, மாநில கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன்
கூறியதாவது:இந்த மொபைல் போன், 'அப்ளிகேஷனை' கேமரா மொபைல் போனில்
பயன்படுத்தும் போது, அந்த கேமரா மூலம் புத்தகத்தில் உள்ள அறிவியல் பாட
படங்கள் நான்கு பரிமாணமாக தெரியும். 10ம் வகுப்பில் அறிவியல், பிளஸ் 2வில்
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், 141 படங்கள் இந்த
தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம், 13 ஆயிரம்
பள்ளிகளைச் சேர்ந்த, 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.இது தொடர்பான, காணொலி
காட்சி குறுந்தகடுகள், 6,000 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு
அனுப்பப்பட்டு உள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பது
குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்
கூறினார்.