ஒரு நாள் அவன் முன் திடீரென தோன்றினார் சிவபெருமான், திடுக்கிட்டு பதறினான் பக்தன், "ஆண்டவா நான் காண்பது கனவா இல்லை, நிஜமா" என்றான், "நிஜம் தான், உன் தொடர் வேண்டுதலும் அதற்காக நீ பூஜையில் கடைபிடிக்கும் ஒழுக்கமும் என்னை உன் முன்னே வர செய்தது, கேள் உனக்கு என்ன வேண்டும் என்றார் சிவ பெருமான்"
தினமும், நல்லா இருக்கணும், நல்லா இருக்கணும்ன்னு, செல்வம் பெருகனும்ன்னு வேண்டிக்கொண்டு இருந்தாலும், ஆண்டவனே நேரில் வந்து கேட்டதால் பதட்டமும், கேட்பதற்கு அசிங்கமும் பட்டு கொஞ்சம் நெருடலாக இழுத்தான் பக்தன்"
தயங்காமல் கேள் என்றார் சிவ பெருமான்.
'வியாபாரம் பெருக வேண்டும், தங்கமும், செல்வமும் கொழிக்க வேண்டும்' என்றான் வழக்கம் போல்
சிவ பெருமான் தன் வலக்கையை உயர்த்தி பூஜை அறையின் சுவர் ஓரத்தில் நீட்டினார், அங்கே ஒரு பெட்டி உருவானது, 'அந்த பெட்டியில் உனக்கு தேவையான தங்கம் தினமும் இருக்கும், நீ எடுத்துக்கொள் என சொல்லி முடிவதற்குள் மறைந்து விட்டார்.
இரவெல்லாம் பதட்டமாக இருந்தான், பொழுது விடிவதற்குள் அது அவனுக்கு பெரிய யுகமாக இருந்தது, அடிக்கடி கடிகாரத்தை பொழுது விடிந்து விட்டதா என நேரம் பார்த்தான், ஒரு வழியாக விடிந்தது, குளியலறைக்கு ஓடினான், குளித்தான், பூஜை அறைக்கு வழக்கமாக ஓடி வந்து, செய்கிற பூஜையை செய்து விட்டு, பெட்டியை திறந்து பார்த்தான்,
பெட்டி முழுக்க தங்கம் இருந்தது, பக்தனுக்கு சந்தோஷ பதட்டம் வந்து விட்டது, தலை கால் புரியவில்லை, அள்ளி முத்தம் மிட்டு கொண்டான், அத்தனையும் அள்ளினான், இழுக்க முடியாமல் இழுத்துக் கொண்டு பரண் மேல் அடுக்கினான்!
இப்படியாக தின பூஜை முடிந்து தங்கத்தை எடுப்பதும், அடுக்குவதுமாய் இருந்தான், ஒரு கட்டத்தில் தங்கம் குவியவே, இருப்பதை வியாபார படுத்தி விட வேண்டும் என தங்க வியாபார தரகர் ஒருவரை பிடித்து, மொத்த தங்கத்தில் பாதியை விற்று பணமாக்கினான்! பணத்தை கொண்டு வந்து வீட்டில் பத்திர படுத்தினான்! வீடூ முழுக்க ஆடம்பர பொருட்களை கொண்டு வந்து ஜொலிக்க வைத்தான், வெளிநாட்டுக்கு ஒரு இன்ப சுற்றுலா சென்று பார்க்காத நாடுகளை எல்லாம் பார்த்து விட்டு வந்து விடலாம் என அதற்கான விசா, டிக்கட் ஆகிவற்றை எல்லாம் தயார் செய்து கலைப்போடு மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தான்!
வரபேற்பறையில் லச்ச ரூபாய் சோபாவில் போலீஸ் அமர்ந்து இருந்தார்கள்! திடுக்கிட்டவன் மனைவி முகத்தை பார்த்தான், மீண்டும் போலீசை பார்த்தான், போலீஸ் பேச ஆரம்பித்தார் "உட்காருங்க" என்றார், உட்கார்ந்தான், கோடி கணக்கான இவ்வளவு தங்கம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது என்றார்கள்,
'எந்த தங்கம், ஏன், என்ன' என உளறினான்
கோடிக்கணக்கான தங்கத்தை வியாபாரம் பண்ணி இருக்கீங்க, வித்தவன் மாட்டிகிட்டான், எங்கிருந்து வந்தது என்றார் மீண்டும், வார்த்தையில் கொஞ்சம் கடுமை!
"அது நான் சேர்த்த தங்கங்கள்" என்றான்
பளார்'ன்னு ஒரு அடி, பக்தனுக்கு காது 'வியிங்' என்றது, 'கேட்டுட்டே இருக்கேன், சேர்த்ததுன்னு சொல்றன்னு உறுமினார்'
'கடவுள் கொடுத்ததுன்னு சொன்னான்' திரும்ப பளார்ன்னு இன்னொரு அடி,
'கடவுள் தான், தங்கம் செய்யுற இடத்தில இருந்து திருடி கொண்டாந்து உனக்கு தங்கம் கொடுத்தாரா? ஆறு இடத்தில திருடி இருக்க நீ கம்னாட்டி' என்றார் போலீஸ்
பக்தனுக்கு பீதி எகிறிக்கிச்சி, ஐயய்யோ, சத்தியமா கடவுள் கொடுத்தது, நான் திருடலை, நான் திருடலைன்னு எழுந்து நகர முயல, ஒரு போலீஸ் பிடிச்சி, மிச்சத்தை ஸ்டேஷன் போய் பேசிக்கலாம், வாங்கன்னு இழுத்தார்,
வரமாட்டேன்னு, பக்தன் கத்தி ரணகளம் பண்ணிட்டான், கதறி அழ, பிடிச்சி இழுக்க, அவன் மனைவி வேற ஒரு பக்கம் ஒப்பாரி வைக்க, கொஞ்ச நேரத்தில முகத்தையெல்லாம் துடைச்சு கிட்டு, 'சார் நான் வரேன், ஒரே நிமிஷம் பூஜை அறைக்கு மட்டும் போயிட்டு வந்துறேன்னு போய் கதவை சாத்திக்கிட்டு,
சிவ பெருமான் கிட்ட, கைய குப்பி, கோவமா கேட்டான், 'கடவுளே, நீ தானே கொடுத்த, இப்போ என்னைய திருடன் சொல்றாங்க' நானா திருடினேன், நீ தானே கொடுத்த, என்ன பண்ண நான்' என வெம்பினான்
சிவன் தோன்றினார்,
என்ன ஆச்சி என்றார், சிவனை பார்த்ததும் அழுதான், 'அழாதே, விஷியத்தை சொல்' என்றார்
எல்லாத்தையும் நீ பார்த்துட்டு தானே இருக்க என்றான்,
"எல்லாத்தையும் பார்த்துட்டே இருக்கிறதுக்கு, சிசிடிவி செக்குரிட்டியா நான்? நடந்ததை சொல் என்றார்'
பக்தனும் நடந்ததை சொன்னான், "சரி அதுக்கு" என்றார் சிவன்
அதுக்கா? இப்போ என் வாழ்க்கையே போச்சி ஆண்டவா, நீ கொடுத்ததை அனுபவிச்ச எனக்கு திருட்டு பட்டம் இப்போ, நான் எங்கே திருடினேன் என்றான் பக்தன்'
'நான் தான் திருடினேன்' என்றார் சிவன்,
'என்னது, திருடினீர்களா'? என்ன கடவுளே, நீங்க கொடுக்கிறது எப்படி திருடாகவும், இது தெரிஞ்சா நான் வாங்கி இருக்கவே மாட்டேனே' என்றான்
'ஏண்டா மர மண்டை, செல்வம் கொழிக்கணும், பொன்னு வேணும், பொருள் வேண்டும்னு தினம் வேண்டுற, உனக்கு தேவையான பொன்னையோ, பொருளையோ, நீ உருவாக்கி வைத்திருக்கும் தேவைகளான மானுட பொருட்களை நான் பூமியில் இருந்து தானே எடுத்து தர முடியும்? கையாலயத்தில் என்ன Gold factory, Home Appliances கம்பெனியா நடத்திட்டு இருக்கேன்? கேட்ட உடனே கொடுக்க? நீ கேட்ட, எங்கே அது அதிகம் இருக்குன்னு பார்த்தேன்,
சில இடம் தென் பட்டது, எடுத்து கொடுத்தேன், அதிலென்ன தப்புன்னு" சொல்லி முடிக்க பூஜை கதவை போலீஸ் தப்பு தப்புன்னு தட்டுற சத்தம் கேட்க, சிவன் மறைந்தார்!
நீதி 1: கொடுத்தது கடவுளே ஆனாலும், அது அடுத்தவனுக்கும் கிடைக்க கூடாது என்பதில் தெளிவா இருப்பான் பக்தன்
நீதி 2: கொஞ்சம் அதட்டி கேட்டா, கடவுளையே காட்டி கொடுத்திடுவான்
நீதி 3: உனக்காக நீ உருவாக்கிய அயிட்டங்களை எல்லாம் கடவுள் கிட்ட கெஞ்சிகிட்டு இருந்தா அவர் எங்கிருந்து போவார்!








