மதுரை காமராஜ் பல்கலையில், கல்லுாரி ஆசிரியர்கள் பட்டச் சான்றிதழ்களுக்கு
உண்மைத்தன்மை (ஜெனுானஸ்) சான்று வழங்குவதில் இழுத்தடிக்கப்படுவதாக
ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு கல்லுாரிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், தங்கள் கல்வித்
தகுதிக்கான பட்டச் சான்றுகளை கல்லுரிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்பின், சம்பந்தப்பட்ட பல்கலைக்கு அச்சான்றுகள் அனுப்பி வைக்கப்பட்டு,
அவற்றின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படும்.சான்றிதழ்களை அனுப்பி
வைக்கும்போது, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர் சார்பில் அதற்கான கட்டணமும்
காசோலையாக அனுப்பி வைக்கப்படும்.
அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள்
உண்மைத்தன்மைக்கான சான்று சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும். ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில், இப்பணிகள் பல மாதங்களாக
கிடப்பில் போடப்பட்டுள்ளது என கல்லுாரி ஆசிரியர்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து சிவகங்கை அரசு கல்லுாரி ஆசிரியர்கள்
சிலர் கூறியதாவது:இக்கல்லுாரியில் பணியாற்றும் 43 பேரின் இளங்கலை, முதுகலை,
எம்.பில்., பி.எச்டி., பட்டச் சான்றுகள் உண்மை தன்மைக்காக காமராஜ்
பல்கலைக்கு 30.9.2015ல் அனுப்பி வைக்கப்பட்டது. உடன் 64,500 ரூபாய்க்கான
காசோலையும் இணைக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாருக்கும் சான்றிதழ் அனுப்பி
வைக்கவில்லை.ஆனால் இதே கல்லுாரியில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா,
பாரதிதாசன் போன்ற பல்கலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடன் அதற்கான உண்மை
தன்மை சான்று கிடைத்து விட்டது.ஆனால் காமராஜ் பல்கலையில் மட்டும் இன்னும்
கிடைத்தபாடில்லை. சான்றிதழ் பிரிவில் கேட்டால் 'அதுபோன்ற சான்றிதழ்களே
வரவில்லை,' என பதில் கூறுகின்றனர். ஆனால்அரசியல், அதிகாரிகள் சிபாரிசில்
சில ஆசிரியர்களுக்கு மட்டும் உண்மை தன்மை சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது
எப்படி சாத்தியம். பல்கலை பதிவாளர் இப்பிரச்னை குறித்து விசாரித்து
சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.