“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் இன்றும் ஒருவேளை உணவுக்கு வகையின்றி வறுமையில் வாடும் ஏழைகள் அதிகம். குடியிருக்க வீடுகளின்றி நடைபாதையில் வசிக்கும் அவலங்கள் இன்றும் உலகளாவிய நிலையில் தொடர்ந்து வருவதுதான் இன்றைய நூற்றாண்டின் காலக்கொடுமை!
நாம் உயிர் வாழ அத்தியாவசியமான உணவைச் சிறப்பிக்கும் பொருட்டு ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளை
உலக உணவு நாள் (World Food Day ) என்று உலக நாடுகள் கொண்டாடுகின்றன. 16.10.1945 ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவுக் கூர்ந்து இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது ஐக்கிய நாட்டுச் சபை. நவம்பர் 1979 ம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இத்தினம் சர்வதேச தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாடு அமைச்சர் பால் ரொமானி என்பவரின் பெரும்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் உலக உணவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தாலியில் உரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவு, விவசாய அமைப்பென அறியப்படும் “ ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை”
அமைப்பானது மக்களின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், விவசாயத்தையும், உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும், சந்தைப்படுத்தல், விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை போக்குவதற்காகவும் பாடுபடுகின்றது. இதன் இலச்சினையிலுள்ள “FIAT PANIS” என்பதன் பொருளானது
“ரொட்டியாவது மனிதனுக்கு இருக்க வேண்டும்” என்பதாகும். ஐக்கியநாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம் 1945ம் ஆண்டு கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951ம் ஆண்டு தலைமை அலுவலகமானது ஐக்கிய அமெரிக்காவில் இருந்து உரோமுக்கு மாற்றப்பட்டது. ஆண்டு தோறும் உரோமில் உணவு விவசாய நிறுவன தலைமையகத்தில் பிரதான வைபவம் நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காக பாடசாலைக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது. சோமாலியாவில், வன்முறையும், உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப்போய்க் கிடக்கும் அந்த நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளதெனவும், கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டாலர்களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171 டொலராக அதிகரித்துள்ளதெனவும் புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
2006ம் ஆண்டு முதல், 2008ம் ஆண்டு வரையான காலத்தில், உணவுப் பிரச்சினை முழு உலக தானிய விலையை உயர்த்தியுள்ளது. 2008ம் ஆண்டில் இருந்ததை விட தற்போதைய தானிய விலை தணிந்துள்ள போதிலும், இன்று வரை ஒப்பீட்டளவில் உயர் நிலையிலேயே இருந்து வருகின்றது. உலகளவில் பெரும்பாலான நாடுகளை இந்த பொருளாதார நெருக்கடி பாதித்துள்ளது. எனவே, நாணய மதிப்பிறக்கம், கடன் மற்றும் சர்வதேச உதவி ஆகிய முறைகள் பெருமளவிற்கு இப்பாதக நிலையை ஊக்குவிக்கின்றன. உலகப் பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கு தொடர்ந்து விரிவடையும் நிலையில் குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சர்வதேசச் சந்தை பாதிப்படைகிறது.
தற்போது, பல நாடுகளின் வர்த்தகத் தொகையும் முதலீட்டு புழக்கமும் பன்முகங்களிலும் குறைவதுடன், வணிக நிலுவை, வெளிநாட்டு நேரடி முதலீடு, வளர்ச்சி உதவி ஆகியவையும் குறைவடைந்துள்ளன. இதனால் வேலை வாய்ப்பு மற்றும் வருமான பிரச்சினைகள் முனைப்பாயுள்ளன. அத்துடன், உணவுப் பாதுகாப்பில் பல்வேறு நாடுகளின் அரசுகள் வழங்கிய நிதியளவும் தொடர்ந்து குறைந்தே வருகின்றன.
2007ம் ஆண்டு மத்தியிலிருந்து உணவுகளுக்கான செலவினமானது உலகளாவிய ரீதியில் 40 சதவீதமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கமரூன், புர்கின்கா பஸோ, ஹெயிட்டி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உணவு விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. “நாங்கள் தவறு எதனையும் செய்யவில்லை. பிரச்சினை பெரியதாக உள்ளது. நாங்கள் சரியான உதவி வழங்கினால் தீர்வுகள் கிட்டும். கடந்த மூன்று வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில் உலகமானது உற்பத்தி செய்வதைவிட கூடுதலான அளவு நுகர்கிறது என்பது மட்டும் நிச்சயம். விலைகள் உயர்ந்தமை, அமெரிக்க டாலரின் வீழ்ச்சி, இயற்கை பேரிடர்கள் ஆகியவை உலக உணவு விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித் திட்டமானது 80 நாடுகளிலுள்ள 73 மில்லியன் மக்களுக்கான உணவுகளைப் பெற்றுக் கொடுக்க வருடம்தோறும் 750 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக வழங்க திட்டமிட்டுள்ளது. உலக பொருளாதார வரைவிலக்கணங்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை கருத்திற்கொண்டு உணர்வுப்பூர்வமாக செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. 2015ம் ஆண்டுக்குள் தீவிர வறுமையை அரைவாசியாகக் குறைப்பது என ஐக்கிய நாடுகள் சபையில் 2000ம் ஆண்டு உச்ச மாநாட்டில் எடுக்கப்பட்ட மிலேனியம் இலக்குகள் எட்டப்படாத நிலையிலேயே உள்ளன” என ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கிமூன் தெரிவித்திருந்தார்.
“உணவு விலைகள் – நெருக்கடியில் இருந்து உறுதித்தன்மைக்கு!” (FOOD PRICES–FROM CRISIS TO STABILITY) என்ற 2011ம் ஆண்டின் உலக உணவு நாள் கருப்பொளின் அடிப்படையில் உலகத்தின் வறுமை நிலை ஒழிந்து சுபிட்சநிலையை அடைய அனைவரும் பிரார்த்திப்போம்!