கடுமையான வாழ்க்கைச் சூழலைச் சந்திக்கும் அனைவருமே தங்களை மாய்த்துக் கொள்வதில்லை. வறுமை,விபத்து, ஆதரவின்மை,தீராத நோய்கள் ஆகியவை இருக்கிற மனிதர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகம் அவர்களை ஒதுக்கி புறக்கணித்து அவமானப்படுத்தி உதாசீனப்படுத்தினாலும் அவற்றையெல்லாம் மீறி வாழ்க்கையின் ருசியை சுவைத்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருமே வாழ்க்கையை வெறுத்து மரணமே மார்க்கம் என்று மயானத்தை நாடி பயணிப்பதில்லை.
சிலர் மட்டுமே சிலந்தி வலையைச் சிறையாக நினைத்து உலகத்தைவிட்டு ஓடிவிடுவதுதான் வழி என ஓய்ந்து விடுகிறார்கள். அந்த சிலர் மட்டும் ஏன் மற்றவர்களைவிட அதிகம் தற்கொலை வயப்படுகிறார்கள் என்பதை அறிவியல் உலகம் தொடர்ந்து துருவித் துருவி ஆய்வு செய்கிறது. எந்தப் பிடிக்கும் அசைந்து கொடுக்காதது மனித மனம்.









