சர்வதேச விண்வெளி நிலையத்தை இனி உங்கள் ஊரில் இருந்தபடியே வானில் பார்க்கலாம்
பல நாடுகளின் கூட்டு முயற்சியில்
உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், சிம்லாவில் புலப்பட்டதாக
தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமியில்
இருந்து அனைவரும் பார்க்கமுடியும் என நாசா தெரிவித்துள்ளது. சிம்லாவில் புலப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம்: சர்வதேச
விண்வெளி நிலையம், பூமியிலிருந்து சுமார் 400 கி.மீட்டர் தொலையில்,
விநாடிக்கு 7.6 கி.மீட்டர் வேகத்தில் விண்வெளியில் சுற்றி வருகிறது. இந்த
விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள், ஆய்வுகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தை நான்கு நிமிடங்கள் காணலாம்: இந்நிலையில்
விண்வெளியில் சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையத்தை, இமாச்சல பிரதேச
மாநிலம் சிம்லாவைச் சேர்ந்த ஒருவர் வானில் பார்த்தது மட்டும் இல்லாமல்,
அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக
பரவி வருகிறது. சிம்லாவில் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி மாலை 6:27 மணிக்கு
புலப்பட்டது.
இது ஒன்றும்
அதிசயம் இல்லை சர்வதேச விண்வெளி நிலையத்தை பொதுவாக ஒரு நிமிடம் முதல்
நான்கு நிமிடங்கள் வரை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் வேகமாக
நகரும் விமானம் போல் இந்த காட்சிகள் புலப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.
விண்வெளி நிலையத்தை காண புதிய இணையதளம்:
சர்வதேச விண்வெளி நிலையம் நீங்கள் வசிக்கும் பகுதியை எப்போது கடந்து செல்லும் என்பதை தெரிவிப்பதற்காக https://spotthestation.nasa.gov/home.cfmஎன்ற
இணையதளத்தை நாசா உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்திற்குள் சென்று நீங்கள்
இருக்கும் பகுதியை குறிப்பிட்டால், அந்த பகுதியை எப்போது விண்வெளி
ஆராய்ச்சி மையம் கடந்து செல்லும் என்ற தகவல்கள் அளிக்கப்படும். இதனை
கணக்கில் கொண்டு நீங்கள் வெறும் கண்ணால் சர்வதேச விண்வெளி நிலையம், ஒரு
நட்சத்திரம் போல் உங்கள் பகுதியில் கடந்து செல்வதை பார்க்க முடியும்.
மேலும் இந்த இணையதளம் வழியாக, உங்கள் பகுதியை எப்போது சர்வதேச விண்வெளி
மையம் கடந்து செல்லும் என்பதை உங்களுக்கு நியாபகப்படுத்துவதற்கான வசதியும்
உண்டு.