ரூபாய் நோட்டு வாபஸ்; விளக்கம் கேட்கிறது பார்லி., குழு

முடிவு ஏன்?
இதுகுறித்து பார்லி., குழு தலைவரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான கே.வி.தாமஸ் தெரிவித்ததாவது: ரிசர்வ் வங்கி கவர்னரிடம் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட முடிவு எப்படி எடுக்கப்பட்டது என கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் வாபஸ் நடவடிக்கைக்குப் பின் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன? வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு எவ்வளவு? புதிய நோட்டுகள் எவ்வளவு வெளியிடப்பட்டன? உள்ளிட்ட கேள்விகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
முன்னேற்பாடுகள் என்ன?
மேலும் ‛டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்தவும், அதனை கையாளவும் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜன.,20ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசியல் சாயம் வேண்டாம்:
மேலும் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி 50 நாட்கள் அவகாசம் கேட்டுக்கொண்டதால், டிசம்பரில் இக்கேள்விகள் கேட்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், இவ்விவகாரத்திற்கு அரசியல் சாயம் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.