திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி நியமன ஆணை கொடுத்து ஆசிரியர் பணியில்
சேர்ந்த, நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு,
மகேஸ்வரி, 36, என்ற ஆசிரியை பணி இடமாற்றத்திற்கான நியமன ஆணையுடன் நேற்று
முன்தினம் சென்றார். அவர், அளித்த நியமன ஆணையை சரிபார்த்த தலைமை
ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்தது.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலகத்திடம்
கேட்டார். அப்போது, மகேஸ்வரி கொடுத்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது.இது
குறித்து, வந்தவாசி தெற்கு போலீசில் தலைமை ஆசிரியை புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், அவர் அளித்த, இடமாறுதலுக்கான ஆணையில் இருந்த,
அனைத்து தகவல்களும் போலியானவை என்பது தெரிய வந்தது.இதையடுத்து, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர், மாவட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும்
ஆசிரியர்களின் சான்றிதழை சரிபார்க்குமாறு, அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு நேற்று உத்தரவிட்டார்.அதனடிப்படையில் விசாரணை நடத்தியதில்,
மேலும், மூன்று ஆசிரியர்கள் போலி ஆணை கொடுத்து பணியில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள், மூன்று பேரும் தற்போது தலைமறைவாகி
விட்டனர்.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் ஜெயகுமார் கூறியதாவது:-மாவட்டத்தில் உள்ள அனைத்து
ஆசிரியர்களின் பணி ஆணை உத்தரவு, கல்வி சான்றிதழ்களின்உண்மை தன்மை குறித்து
ஆய்வு செய்ததில், தற்போது பணிபுரியும் மூன்று பேர், பணியில் சேர முயன்ற
ஒருவர் என, நான்கு பேர் போலி சான்று வைத்திருந்தது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்.பணியில் சேர்ந்த நாள் முதல், தற்போது வரை அவர்கள் பெற்ற
ஊதியத்தை திரும்ப பெறவும், குற்றப்பிரிவு போலீசார் மூலம் வழக்கு பதிவு
செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.