குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் தாக்கல் செய்தபொதுநல மனு:கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை, மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன.ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது, உண்டு, உறைவிடப் பள்ளி. அங்கு, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு, 75 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இந்த பள்ளிகளில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, கட்டணம் இல்லை.
9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில், 600 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உள்ளன. நவோதயா வித்யாலயா சமிதி தலைவருக்கு மனு அனுப்பினேன். அவர், 'இப்பள்ளி துவங்க, தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை' என்றார்.தமிழகத்தில், மாவட்டந்தோறும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் பெஞ்ச், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை செயலர், நவோதயா வித்யாலயா சமிதி தலைவர், தமிழக பள்ளி கல்வித் துறை முதன்மை செயலருக்கு,'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.








