பாராளுமன்றத்தில் நிதி மசோதாவில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டது. வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ‘ஆதார்’ எண்ணை இணைப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்காக, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் ‘ஆதார்’ எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, நிறைய பேருக்கு தோல்வியே ஏற்பட்டது.
ஏனென்றால், ‘பான்’ எண் தொடர்பான ஆவணங்களில், எல்லோரது பெயரிலும் தந்தை பெயரும் சேர்க்கப்பட்டு இருக்கும். ஆனால், ‘ஆதார்’ எண் ஆவணங்களில், தந்தை பெயரின் ‘இன்ஷியல்’ மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த முரண்பாடுகளால், இணைக்க முடியவில்லை.
இதற்கு வருமான வரித்துறை தீர்வு கண்டுள்ளது. ‘ஆதார்’ இணையதளத்தில் சென்று, பெயர் மாற்றத்துக்கான கோரிக்கை விடுத்து, அதற்கு ஆதாரமாக ‘பான்’ கார்டின் ஸ்கேன் காப்பியை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம், ஒரே மாதிரியான பெயர் கிடைப்பதால், அதை ‘பான்’ எண்ணுடன் இணைக்க முடியும் என்று வருமான வரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில பெண்கள் திருமணத்துக்கு பிறகு கணவர் பெயரை சேர்த்திருப்பார்கள். அவர்களுக்காக, அவர்கள் ‘ஆதார்’ எண்ணுக்கு பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ‘ஒன் டைம் பாஸ்வேர்டை’ (ஓ.டி.பி.) வருமான வரித்துறை அனுப்பும். அப்போது, ‘பான்’, ‘ஆதார்’ என இரு ஆவணங்களிலும் அவர்களின் பிறந்த ஆண்டு ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று வருமான வரித்துறை சரி பார்க்கும். அந்த ஓ.டி.பி.யை. பயன்படுத்தி, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும், விமானத்தில் தகராறு செய்யும் பயணிகளை, டிக்கெட் முன்பதிவின்போதே அடையாளம் கண்டறிய வசதியாக, உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அல்லது பாஸ்போர்ட்டை கட்டாயம் ஆக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.








