42 நடுநிலைப்பள்ளிக்கு 'தலை' நியமிக்க உத்தரவு
நான்கு ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட 42 நடுநிலைப் பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர்களை நியமிக்க தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம்தமிழகத்தில் 2014--15ல் 42 தொடக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்டது. அதன்படி முதலாம் ஆண்டில் கணிதம், இரண்டாம் ஆண்டில் அறிவியல், மூன்றாம் ஆண்டில் ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், தலைமை ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.நிதிநிலைமையை காரணம் காட்டி இரண்டு ஆண்டுகளாக, தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு நிதித்துறை அனுமதி வழங்கவில்லை.இதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர்களை பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களாக நியமிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.