புதுடெல்லி:
தேசிய
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிடும்
பாடப்புத்தங்கள் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்கள் உருவாகி
வருகின்றன.
இந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி
மற்றும் பள்ளி பாட புத்தகங்களில் புத்தரின் போதனைகள் சேர்க்கப்படும் என்று
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இது
தொடர்பாக புத்த ஜெயந்தி விழா ஒன்றில் ஜவடேகர் பேசுகையில், “அரசியலானது
வாழ்க்கையை வாழ்வதற்கான வளங்களை தருகின்றது. ஆனால் புத்தரை போன்ற
மகாத்மாக்களின் போதனைகள் தான் ஏன் வாழ வேண்டும், எப்படி வாழ வேண்டும்?
என்று போதிக்கின்றது. அதனால் புத்தரின் போதனைகளை கல்வி முறையில் சேர்ப்பது
முக்கியமானதாகும்.
அனைத்து விதமான
மாணவர்களுக்கும் புத்தரின் போதனைகள் சென்று சேருவதை உறுதி செய்வேன்.
அப்போது தான் கல்வி முறை முழுமையடையும். உண்மையில் கல்வியின் உண்மையான
நோக்கம் நல்ல மனித பண்புகளுக்கு தயார் ஆவது தான்” என்றார்.
நிகழ்ச்சியில்
பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி கிரென் ரிஜிஜூ “புத்தரின் போதனைகளை
பின்பற்றினால் இந்தியா உலகின் தலைமையாக மாறும். உலக நாடுகள் இந்தியாவை
புத்தர் பிறந்த இடமாக பார்க்கிறது” என்றார்.








