
நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடஃபோன், மொபைல் நிறுவனங்களான லாவா மற்றும் இன்டெக்ஸுடன் இணைந்து 2ஜி வசதியுள்ள பேசிக் மொபைல்களை வாங்குவோருக்கு வாய்ஸ் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகின்றன. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், வோடஃபோனைப் போலவே மைக்ரோமேக்ஸ், லாவா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரூ.2,000க்கு 2ஜி மொபைல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஜியோவைப் போன்று இவை, இலவச அழைப்புகள் வசதியுடன் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மொபைல் போன்களை வாங்கி வோடஃபோன் சேவையில் புதிதாய் இணையும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் ஏற்கனவே இந்த மொபைல் ஃபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும், வோடஃபோன் சேவையில் புதிதாய் இணையும் அல்லது ஏற்கனவே வோடஃபோன் சேவையை பயன்படுத்துவோருக்கும் இந்தச் சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலுள்ள 45 கோடி மொபைல் வாடிக்கையாளர்களில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக மட்டும் 25 கோடி பேர் தங்களது மொபைல் சாதனங்களை மாற்றாமல் இருக்கின்றனர் என ஹாங்காங்கை சேர்ந்த கவுண்டர்பாயிண்ட் நிறுவன ஆய்வு தெரிவித்திருக்கிறது.
ஏர்டெல் நிறுவனமும் ஜியோஃபோன் போன்ற வசதிகள் நிறைந்த 4ஜி மொபைல் ஒன்றை வெளியிடலாம் என சமீபமாக வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன. வோல்ட்-இ அழைப்புகளை மேற்கொள்ள உதவும் மொபைல்களைத் தயாரிக்க ஏர்டெல் நிறுவனம், மைக்ரோமேக்ஸ் அல்லது இன்டெக்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








