
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், உலக தமிழ் இணைய மாநாடு நேற்று
துவங்கியது. உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) மற்றும் மாநில
திட்டக்குழு இணைந்து ஆண்டுதோறும் உலக தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது.
அதன்படி, 17வது மாநாட்டை உத்தமம் அமைப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலை இணைந்து
நடத்துகிறது. இந்த மாநாடு நேற்று வேளாண் பல்கலை வளாகத்தில் தொடங்கியது.
இதில், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் அறிஞர்கள்,
தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த 3 நாள் மாநாட்டில் இணையம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில்
ஆய்வறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் பயிற்சி பட்டறை, மக்கள்
அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த மாநாட்டை
துவக்கிவைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் பேசும்போது,
``தமிழக அரசு மென்பொருட்களில் தமிழ் மொழியினை நிறுவுதல் தொடர்பாக பல்வேறு
நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை
முடிந்த பின் கட்டாயம் தமிழ் இணைய பயன்பாட்டாளர்கள் அதிகரிப்பார்கள். இந்த
மாநாட்டில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், தகவல்கள் குறித்த அறிக்கையை
கொடுத்தால், அதனை பாடப்புத்தகங்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்”
என்றார். அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் பங்கேற்று
பேசியதாவது: தமிழை இணையத்துடன் இணைக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில்
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சி
கட்டுரைகள் வெளியாகின்றன. இந்த கட்டுரைகளை தமிழ் இணையத்துடன் இணைத்தால் அது
தமிழ்வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.
தமிழ்மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சி அடைய வேண்டும். தமிழ்
மொழிக்கான பிரத்தியேக தேடுதளம் ஒன்றை அமைக்கும் போது, விக்கிப்பீடியாவில்
தமிழ் முதல் மூன்று மொழிகளில் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. மென்பொருள்
நிறுவனங்களில் தமிழ்வழி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்து
வருகிறது என்றார்