திண்டுக்கல், போலீசார், அமைச்சுப்பணியாளர், தீயைணப்புத்துறையினரின்
வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அறிவிக்காமல், போலீசார் எழுத்து தேர்வு
முடிவுகளை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து இளைஞர்கள் எஸ்.பி.,
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் இரண்டாம் நிலை போலீசாருக்கான எழுத்து
தேர்வு மார்ச் 11ல் நடத்தப்பட்டது. பணிநியமனத்தில் போலீசார்,
அமைச்சுப்பணியாளர், தீயணைப்பு வீரர்கள் வாரிசுதாரர்களுக்கு 10 சதவீதம் இட
ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் பணி நிறைவு பெற்றாலும் போலீசாரின்
வாரிசுகளுக்கு ஒதுக்கீடு உண்டு. ஆனால், பணி நிறைவு பெற்ற அமைச்சுப்பணியாளர்
வாரிசுகளுக்கு ஒதுக்கீடு கிடையாது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்
உள்ளது.இந்நிலையில் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் ஆக.11ல் எழுத்து
தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டது.இந்த தேர்வுதான் எங்களுக்கு
இறுதி வாய்ப்பு, வாரிசுதாரர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க
வேண்டும். வாரிசுதாரர்களின் தேர்வு முடிவுகளையும் சேர்த்து வெளியிட
வலியுறுத்தி திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, எஸ்.பி.,
சக்திவேலுவிடம் மனு அளித்தனர்.