
எந்த சான்றிதழ் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது? - விளக்கம் கேட்கும் கலை ஆசிரியர்கள் நலச்சங்கம்
சிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள்
அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது? என ஆசிரியர் தேர்வு வாரியம்
தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம்
கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்
23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11
தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய
சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர்.
இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு
ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித்
தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே
தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி
அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும்,
தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய ஆசிரியர்களுக்கு
எந்த எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு
வாரியம் குறிப்பிடவில்லை என்று கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றச்சாட்டு
வைத்துள்ளது.
இது குறித்து கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில்,
"சிறப்பாசிரியர் பணி இடத்திற்கு உண்டான கல்வித் தகுதி இருப்பது போல்
உண்மைக்கு மாறான பொய்யான தகவல் கொடுத்துள்ளவர்கள் பெயர் சான்றிதழ்
சரிபார்ப்பு கடிதத்தில் இடம் பெற்றுள்ளது என தகவல் அளித்தும் மாவட்ட
முதன்மை கல்வி நிர்வாகம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஆசிரியர் தேர்வு
வாரியத்திற்கு அனுப்பியுள்ளது.அதில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிக்கு
அரசு தொழில்நுட்பத் தேர்வு மட்டுமே எழுதியவர் ஆசிரியர் தேர்வு வாரியம்
குறிப்பாணைப்படி (TECHNICAL TEACHER CERTIFICATE) ஆசிரியர் தொழில் நுட்ப
சான்றிதழ் கல்வித் தகுதி இல்லாமல் போலியாக விண்ணப்பித்து போட்டித் தேர்வில்
கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல் ஓவிய
ஆசிரியருக்கு அறிவித்துள்ள சான்றிதழ் தகுதிகள் இல்லாத போதும் சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு அவர்கள் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு
நடைபெற்றுள்ளது. அப்படி என்றால் ஓவிய ஆசிரியர் பணிக்கு எந்த சான்றிதழ்கள்
அடிப்படையில் தற்போது பணி வழங்கப்படும்? என ஆசிரியர் தேர்வு வாரியம்
தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பிட்ட சான்றிதழ்களே இல்லாதவர்களுக்கு எவ்வாறு பணி வழங்க
முடியும்.அரசாணை 242 எண் 12 படி 10+2+3+2 என்ற முறையில் தான்அதற்கு தகுதி
பெற்றவர்களுக்கு மட்டும் தான் பணி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆசிரியர்
தேர்வு வாரியத்திற்கு மனு அளித்தும் எந்த தெளிவும் கிடைக்காததால் சென்னை
உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்." என்றார்.