வெள்ளை இது சமாதானத்தின் நிறமென நம்பியவர்களின் முகங்களில் கரிபூசி வெறித்தன எக்காளமிடுகிறது ஆளும் வர்க்கம்
நிறைய வாங்குகிறாய் என்று சொல்லும் நரம்பில்லா நாக்கே
உன் உச்சி கிரீடம் நான் தந்த வாக்கே
உன்னைப்போல் என்னையும் நினைத்தாயோ?
வாங்குதல் பழக்கமற்ற கேட்கும் பறவை நான்
மலிந்த விஷ விதைகளை நீங்கள் பாரெங்கும் தூவலாம்
விளைவதெல்லாமே விறகாகிடும் என்பதுங்கள் கணிப்போ
மூளும் கோபத்தீயில் பொசுங்கி நெளியும் உங்கள் சுயரூபம்
எறும்பென சேகரித்த எங்கள் எதிர்கால பருக்கைகளை மறக்கடிக்க எத்தனை அறிக்கைகள்
உடன் இணைகிறது உதவாத அதிகார அல்லக்கைகள்
கூடிய கூட்டமொன்றும் பிரியாணி கூட்டமல்ல
மனதெலாம் ஏமாற்றத்தின் வலி பொதிந்த போராளிகள் கூட்டம்
ஆடுகளை உங்கள் அதிகாரம் பட்டியில் அடைத்திருக்கலாம்
சிலரை பலியிட்டிருக்கலாம்
எங்கள் உழைப்பின் வாடை உங்கள் நிம்மதிப் பெருமூச்சினில் கலவாதிருக்கலாம்
களிப்பும் மமதையும் கழன்று விழும் போது
நிச்சயம் உங்கள் செவிட்டில் அறைந்து சொல்லும்
*போராட்டமின்றி ஏது விடுதலை*
*சீனி.தனஞ்செழியன்*








