சாதாரணமாகவே உணவு உண்ட பிறகு முன்பு பெரியவர்கள் வெற்றிலை, பாக்கு போடுவதை
வழக்கமாக வைத்திருந்தனர். அது செரிமானத்துக்கு உதவும் என்பதால் அத்தகைய
பழக்கம் அன்று இருந்தது. அது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், இன்றைய
நவீன காலத்தில் உணவகங்களில் சாப்பிடும்போது சீரகம், பெருஞ்சீரகம், ஸ்வீட்
பீடா, வாழைப்பழம் போன்ற பதார்த்தங்களைத் தருகிறார்கள். பலருக்கு டீ, காஃபி
சாப்பிடும் பழக்கமும் அதிகமாக இருக்கிறது.
இது தவறானது. நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையில் அரைக்கப்பட்ட பிறகு,
அதிலிருந்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களாகப் பிரிகிறது. அதாவது, உணவு
இரைப்பையில் நன்றாக செரிக்கப்பட்டு சிறுகுடல், பெருங்குடலுக்கு சென்று
கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து என தனித்தனியாக பிரிந்து
ரத்தத்தோடு கலக்கிறது. இந்த செயல்பாடுதான் நாம் உணவு எடுத்துக் கொள்வதற்கான
முக்கியமான காரணம். அதனால் நாம் உண்ட உணவு நல்லவிதமாக ஜீரணம் ஆக வேண்டும்.
அதனால் செரிமானம் தடைபடாத வண்ணமும், உண்ட உணவின் சத்துக்களை உடலில்
முழுமையாக கிரகித்துக் கொள்ளும் விதத்துக்கேற்றவாறும் கவனமாக இருக்க
வேண்டும். ஒரு முழுமையான உணவு எடுத்துக்கொண்ட பிறகு, செரிமானத்திற்கென்று
நாம் இன்னொரு உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது. உதாரணத்துக்கு வயிறு நிறைய
பிரியாணி சாப்பிட்ட பிறகு, குளிர்பானங்களைக் குடிக்கிறார்கள். இந்தப்
பழக்கங்கள் ஏற்கனவே உண்ட உணவை செரிப்பதற்கு சிக்கலை ஏற்படுத்தும். பிறகு
என்ன சாப்பிட்ட வேண்டும்.
அதனால்தான் சாப்பிடுவதற்கு முன் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக
இருக்க வேண்டும்.‘‘உணவு வேளையின் 30 நிமிடத்திற்கு முன் பழங்களை
சாப்பிடலாம். வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா, திராட்சை போன்ற சதைப்பற்று,
சாறு நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது அதிகபட்சம் 30 நிமிடங்களில்
செரிமானம் அடைந்து நல்ல பசியைக் கொடுக்கும். ஜீரணத்திற்கும் உதவியாக
இருக்கும். அதேவேளையில் உணவுக்குப் பிறகு பழங்கள் எடுத்துக் கொள்வதைத்
தவிர்க்க வேண்டும்.

அது செரிமானத்திற்கு சிக்கலை உண்டாக்கும். மேலும், அந்த பழங்களில் உள்ள
சத்துக்களும் வீணாகும். உணவை செரிப்பதற்கு நம்முடைய இரைப்பைக்கு உதவும்
வகையில் உணவுக்கு பின்னான பதார்த்தங்கள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்ள
வேண்டும். அந்த வகையில் வெந்நீர், சீரகம், சோம்பு, க்ரீன் டீ, பிளாக் டீ,
இதில் எலுமிச்சை, இஞ்சி, நன்னாரி வேர் கலந்த வெந்நீர், மோர் போன்றவைகளை
எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவை எச்சில்(Saliva), செரிமான அமிலம்(Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான
பைல்(Bile). இந்த மூன்று திரவங்களின் அளவை அதிகரிக்கச் செய்ய நொதிகள்
தயாரிப்பை ஊக்குவிக்கச் செய்கிறது. மசாலா உணவுகளால் ஏற்படும்
நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் எதுக்களித்தல் போன்ற பிரச்னைகளை
தவிர்க்கிறது. வழக்கமாக பால், ஐஸ்க்ரீம், சூப், டீ, காஃபி போன்ற பண்டங்களை
உணவுக்குப் பிறகு சாப்பிடக் கூடாது. ஏனெனில், ஏற்கனவே சாப்பிட்ட உணவோடு
சேர்ந்து அதன் செரிமானத்திற்கு இடையூறு செய்யும்.
அதேபோல செரிமானத்திற்கு தேவையான மெட்டபாலிசம் அதிகரிப்பதையும் தடுக்கும்.
குறிப்பாக, நாம் உண்ட பிறகு கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்து
இம்மூன்றும் ஜீரணமாவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் சாப்பிட்ட பிறகு
இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. உணவுக்குப் பிறகு கர்ப்பிணிப்
பெண்கள், முதியவர்கள் கட்டாயமாக வெந்நீர், சீரகம், சோம்பு, சீவல் வெற்றிலை
எடுத்துக்கொள்வது அவர்களின் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
அவர்களுக்கு இருக்கிற நெஞ்செரிச்சல், வாயுத் தொல்லையையும் போக்கும். அதே
நேரத்தில் உணவகங்களில் வைத்திருக்கும் சோம்பு, சீரகம் போன்றவைகள் அதன்
சத்துக்கள் உறிஞ்சப்பட்டு வெறும் சக்கைகளாகவே இருக்கிறது. அந்த வெறும்
சக்கை சீரகத்தின் மேல் சர்க்கரை கோட்டிங் செய்யப்பட்டே ஓட்டல்களில்
வைத்திருக்கிறார்கள்.