ஜோதிடம் என்றாலே பலவகை ஜோதிடங்கள் உண்டு. ஒவ்வொருவரும் தங்கள் பிழைப்புக்காக உருவாக்கி கொண்டவை.
ரேகை ஜோதிடம், ஜாதக ஜோதிடம், எண் ஜோதிடம், நாடி ஜோதிடம், வாஸ்து ஜோதிடம், கிளி ஜோதிடம் என்று பட்டியல் நீள்கிறது...
மற்ற ஜோதிடங்களை விட ஜாதக ஜோதிடம் பற்றி அதிகமாக பார்க்கிறார்கள்.
ஜாதகம் கூறுவது..
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்ற ஒன்பது கிரகங்கள் பூமியை சுற்றி வருகின்றன.
இதில் கவனிக்க வேண்டியது, நட்சத்திரமான சூரியனை கிரகம் என்கிறது. துணைக்கோளான சந்திரனை கிரகம் என்கிறது. நிழல் கிரகங்களான் ராகு கேதுவை கிரகங்கள் என்கிறது. ஒரு கிரகமான பூமியை கிரகமாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஜாதகத்தில் துணைக்கிரகங்களே கிடையாது. எல்லாகிரகங்களும் பூமியை சுற்றிவருகின்றனவாம். இதை வைத்துக்கொண்டுதான் பிறக்கும் குழந்தைகளுக்கு பலன் கூறுகிறார்கள்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்றாலும் அவர்கள் என்னதான் கூறுகிறார்கள் இவற்றை எப்படி கணிக்கிறார்கள் என்பதையும் பார்த்துவிடுவோம்.
12 ராசிகள்.
மொசப்பத்தேனியா நாகரீகத்தில் இருந்து இது தொடங்குகின்றது. இரவு நேரங்களில் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்க்கும்போது, அந்த நட்சத்திரங்களை புள்ளிகளாக கருதிக்கொண்டு, அந்த புள்ளிகளை இணைக்கும்போது ஒரு படம் கற்பனையில் வருகிறதா அதை 12 இராசி ஆக்கினார்கள். இந்த இராசி்களிலும் ஆண் இராசி பெண் இராசி உண்டாம். 1,3,5,7,9,11, ஆண் இராசியாம். 2,4,6,8,10,12 பெண் இராசியாம்.
அவை பின்வருமாறு..
மேடம் - ஆடு
இடபம் - எருது
மிதுனம் - இரட்டையர்
கடகம் - நண்டு
சிம்மம் - சிங்கம்
கன்னி - கல்யாணமாகாத பெண்
துலாம் - தராசு
விருச்சகம் - தேள்
தனுசு - வில்
மகரம் - வெள்ளாடு
கும்பம் - குடம்
மீனம் - மீன்
இந்த உருவங்கள் மற்றும் ஆண் பெண் எல்லாம் எவ்வாறு நட்சத்திர கூட்டங்களுக்கூடாக தெரிந்தது என்பது நானறியேன்.
*. நட்சத்திரங்கள் 27
அடுத்து ஜாதகப்படி நட்சத்திரங்கள் 27 மட்டும்தான் என்கிறது. (எண்ணற்ற நட்சத்திரங்கள் அல்ல.)
அவையாவன...
அஸ்வினி, பரணி, கார்த்தி்கை, ரோகினி, மிருகசீருடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்பனவாகும். அதாவது வானத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் இவை மட்டும்தான் என்கிறது. மற்றவை என்ன கணக்கு என்பது புரியவில்லை.
*. பஞ்சாங்கம்
இவை எல்லாவற்றையும்பற்றி சொல்கின்ற புத்தகத்திற்கு பெயர் பஞ்சாங்கம். பஞ்ச என்றால் ஐந்து. அதாவது ஐந்து செய்திகளைபற்றி செல்லுகின்ற புத்தகம் பஞ்சாங்கம். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்மம் என்ற ஐந்தைப்பற்றி கூறுகின்றது. பஞ்சாங்கம் என்பது பெரிதாக ஒன்றுமில்லை ஒரு அந்தக்காலத்தைய நாட்காட்டி அவ்வளவுதான்.
*. திதி
இனி பஞ்சாங்கத்தில் கூறப்படும் திதி என்றால் என்ன என்று பார்ப்போம். அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரைக்கும் நாட்கள் நகரும்போது அமாவாசை/பௌர்ணமி முடிந்து எத்தனையாவது நாள் என்று கூறுவதுதான் திதி.
வெறும் வடமொழி சொற்களால் ஆனதால் இவை புரிவதில்லை. கிருஸ்ணபட்ச திதி, சுக்கிலபட்ச திதி என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். அது வேறு ஒன்றுமல்ல சுக்கில என்றால் வட மொழியில் வெளிச்சம் என்று அர்த்தம். சுக்கில பட்சம் என்றால் இருட்டில் இருந்து வெளிச்சத்தைநோக்கி நகரும் காலப்பகுதி. கிருஸ்ண என்றால் வட மொழியில் கறுப்பு என்று அர்த்தம். கிருஸ்ண பட்சம் என்றால் வெளிச்சத்தில் இருந்து இருட்டைநோக்கி நகரும் நாட்கள். இவ்வளவுதான்.
இனி அந்த நாட்களை எவ்வாறு குறிக்கிறார்கள் என்று பார்ப்போம். ஒன்றுமல்ல வெறும் எண்களை வடமொழியில் குறிப்பிடுகிறார்கள்
.பிரதமை - (பிரத=1)
துவிதியை - (துவி=2)
த்ரிதியை - (த்ரி=3)
சதுர்த்தி - (சதுர்=4)
பஞ்சமி - (பஞ்ச=5)
சஷ்டி - (சஷ்டி=6)
சப்தமி - (சப்த=7)
அஷ்டமி - (அஷ்ட=8)
நவமி - (நவ=9)
தசமி - (தச=10)
ஏகாதசி - (ஏக் தசி=11)
துவாதசி - (துவ் தசி=12)
த்ரயோதசி - (த்ர தசி=13)
சதுர்தசி - (சதுர் தசி=14)
அமாவாசை / பௌர்ணமி
பஞ்சாங்கம் என்பது வெறும் அந்தக்காலத்தைய நாட்காட்டி. இதைவைத்துதான் பலன் கூறுகிறார்கள். இன்றைக்கு யாராவது ஆங்கில நாட்காட்டியை கையில் வைத்தபடி பலன் உங்களிற்கு கூறினால் அவரை எவ்வாறு பார்ப்பீர்களோ அதற்கு ஒப்பானதே இதுவும்.
*. லக்னம்
அடுத்தது லக்னம்.
ஜாதகத்தில் ஒருகோடுபோட்டு "ல" என்று எழுதிவைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அது ஒன்றுமில்லை. ஒருவர் பிறந்த திகதியில் வானில் இருந்த நட்சத்திரக்கூட்டம் எந்த அமைப்பில் இருந்தது, அதாவது எந்த இராசி அருகில் இருந்தது என்பதே லக்னம்.
*. செவ்வாய்தோசம்
இனி இறுதியாக முக்கியமான செவ்வாய் தோசம் என்ற பிரச்சனைக்குள் வருவோம்.
ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு வீடுகள் உண்டு. 12 கட்டங்கள். உதாரணமாக செவ்வாய் கிரகம் அதற்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் இருக்காமல் 2, 4, 7, 8, 12 ஆகிய வேறுவீட்டில் இருந்தால் அந்த ஜாதகம் செவ்வாய் தோசமுள்ள ஜாதகம். பரிகாரம் செய்ய வேண்டும்.இவ்வாறு கணிக்கும்போது 40% ஆனவர்களுக்கு செவ்வாய்தோசம் வருவதால் அதற்கும் சில விலக்கு கொடுத்தார்கள். ஏனெனில் எல்லோருக்கும் பரவலாக செவ்வாய்தோசம் இருந்தால் இவர்கள் பிழைப்பு ஓடாதே! அதனால் 4, 8 வீடுகளில் இருந்தால் பரவாயில்லை என்றும், 2, 7, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் கூடவே கூடாது என்றும் கூறினார்கள். மீறி திருமணம் செய்தால் தோசமுள்ளவரின் மாமியார் இறந்துவிடுவாராம்.
எத்தனையோ கோடி மயில்களுக்கு அப்பால் உள்ள செவ்வாய் கிரகம் எவ்வாறு இந்த மாமியாரை கண்டுபிடித்து போட்டுத்தள்ளும் என்பது எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் கூறலாம். வெளிநாடுகளில் இந்த பிதற்றல்களே தெரியாத பலர் இன்றும் நலமாகவே வாழ்கின்றனர். உலகம் மிக பெரியது. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் வெளி உலகையும் எட்டிப்பாருங்கள்.
எல்லாவற்றையும்விட முக்கியமானது கூற மறந்துவிட்டேன். நவகிரகங்களிலும் நால் வர்ணம் உள்ளது. அதாவது விசாலமான வியாழனும் பளபளக்கும் வெள்ளியும் பிராமண கிரகங்களாம். ஞாயிறு, செவ்வாய் சத்திரியர்களாம். திங்களும் புதனும் வைசியராம், எதெல்லாம் உருப்படாது என்று கூறுகிறார்களோ அது சூத்திர கிரகங்களாம். அதாவது சனி, ராகு, கேது.
ராகு காலம், ஏழரை நாட்டுசனி பார்க்கும் சூத்திரர்கள் இதை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.