அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், சிறப்புப்
பயிற்சி வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம்
கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்
செயலாளர் டாக்டர் ரவீந்தர்நாத் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை
கூறியதாவது:
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்து 15 நாள்கள் ஆகிவிட்டன.
ஆனால், இதுவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை மாநில
அரசு தொடங்கவில்லை.
கடந்த ஆண்டில் 1,300 அரசுப் பள்ளி மா
ணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி
பெற்றனர். ஆனாலும், அவர்களில் பலர் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. மூன்று
பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. அந்த நிலை
நிகழாண்டிலும் தொடராமல் இருக்க வேண்டுமானால், உடனடியாக அரசுப் பள்ளி
மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றார்
அவர்.