நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்” என்கிற பிரபலமான ஒரு வரி உண்டு. பின்விளைவுகள் குறித்து எந்தப் பார்வையும் இல்லாமல் தற்போதைக்குப் பிழைத்தால் போதும் என அப்போதைக்கு அங்கீகரித்த பல விஷயங்கள் பலருடைய எதிர்காலத்தையே திருப்பிப் போட்டிருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எதைச் சார்ந்து வாழ ஆரம்பிக்கிறோமோ பின்னாளில் நமக்கே தெரியாமல் அதை நாமே உருக்குலைத்து விடுகிறோம் என்பது தான் உண்மை. அப்படி அவ்வளவாகச் சொல்லப்படாத பல நைஜீரியாத் தலைமுறைகளின் ஆயுளை முடித்த கச்சா எண்ணெய்யின் கதை இது.
நைஜீரியா இயற்கையாகவே கச்சா எண்ணெய் கிடைக்கிற நாடு. முக்கியத் தொழிலாக இப்போது இருப்பதும் கச்சா எண்ணெய் தான். ஆப்பிரிக்காவில் அதிக பெட்ரோல் உற்பத்தி செய்கிற நாடு நைஜீரியா. Niger Delta பெட்ரோல் உற்பத்தியில் மிக முக்கியமான மாநிலம். நாட்டின் முக்கியமான ஆறு NUN. அலையாத்தி காடுகளுக்கு இடையே ஓடியது. அதைச் சுற்றி பல ஊர்கள் இருந்தன. 50 வருடங்களுக்கு முன்பு அதைச் சுற்றியுள்ளவர்களுக்கு அந்த ஆறு தான் எல்லாமே. மீன்பிடித் தொழில் அப்போது முக்கியத் தொழிலாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய்யை எடுக்கப் பல ஆயில் நிறுவனங்கள் நைஜீரியாவுக்குப் படையெடுத்தன. அதற்கு முன்பும் நிறுவனங்கள் இருந்தன. ஆனால், மிகப் பெரிய பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை.
எல்லோருக்கும் வேலை கிடைக்கும் என்பதால் மக்களும் அரசும் அமோகமாக அவர்களை வரவேற்றார்கள். பல எண்ணெய் நிறுவனங்களும் தங்களுடைய தொழிலைத் தொடங்கினர். பைப் லைன்கள் அமைத்து தொழிற்சாலைக்குக் கச்சா எண்ணெய்யைக் கொண்டு சென்றார்கள். மக்களை விபரீதத்தின் பக்கம் கொண்டு சென்றதில் இந்த பைப் லைன்களுக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. கொடூரமான பல பக்கங்கள் இங்கிருந்து தான் ஆரம்பித்தது.
பெட்ரோல் நல்ல விலைக்கு விற்கப்படுவதை மக்கள் அறிந்திருந்தார்கள். பெட்ரோலிய நாடு என்பதால் கச்சா எண்ணெய்யில் இருந்து எப்படி பெட்ரோலை பிரித்தெடுப்பது என்பதைப் பலரும் அறிந்திருந்தனர். இதற்கடுத்து நடந்த விபரீதத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு அங்கிருக்கும் அலையாத்திக் காடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இங்குள்ள அலையாத்திக் காடுகள் பல வழிகளைக் கொண்டவை. சுமார் 1000 சதுர கிலோ மீட்டர் கொண்டவை. அந்த காடு ஒரு குழந்தையைப் போன்றது. யாரைக் கொண்டு சென்று விட்டாலும் காணாமல் போய் விடுகிற அளவுக்குப் பல வழிகளைக் கொண்டது. காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பது கூட சிரமமான பணியாகத் தான் இப்போது வரை இருக்கிறது. நன்கறிந்தவர்களைத் தவிர வேறு யார் சென்றாலும் சுற்றலில் விட்டு விடும் மாயபூமி அது. அதையொட்டிய பகுதியில் தான் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பைப் லைன்களை அமைத்திருந்தனர்.
பெட்ரோலின் விலை, அதிக லாபம் என்கிற விஷயங்கள் மக்களை விபரீதத்தின் பக்கம் கொண்டு போய் நிறுத்தியது. படகுகளில் பெரிய பெரிய பேரல்களை எடுத்துக் கொண்டு பைப் லைன் பக்கம் ஒதுங்கினார்கள். பைப் லைன்களை உடைத்து கச்சா எண்ணெய்களைப் பேரல்களில் நிரப்பினார்கள். ஒரு வகையில் இது ஆபத்தான வேலை தான், ஆனால் இதைவிட ஆபத்தான வேலையைச் செய்ய துணிந்தார்கள். அலையாத்திக் காடுகளில் பேரல்களைக் கொண்டு சென்று கச்சா எண்ணெய்களில் இருந்து பெட்ரோலை பிரித்தெடுக்கத் தொடங்கினார்கள். கச்சா எண்ணெய் முதல்தரமான எண்ணெய்யாக இருந்ததால் பெட்ரோலை பிரித்தெடுப்பது எளிதாக இருந்தது. கரணம் தப்பினால் மரணம் என்கிற வேலை தான். ஆனால் பணம், நினைத்ததை விட அதிகம் கிடைக்கும் என்பதால் தீவிரமாக உழைத்தார்கள், கச்சா எண்ணெய்யை தீ மூட்டிக் கொதிக்க வைத்தார்கள். ஆறு மணி நேரம் கச்சா எண்ணெய்யைத் தீயில் கொதிக்க வைத்தார்கள். உடலில் எந்த உடையும் அணியாமல் மிகக் கவனமாக பெட்ரோலை பிரித்தெடுக்கத் தொடங்கினார்கள். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் என மூன்று வகையான எரிபொருள்களும் கிடைத்தன.
20 லிட்டர் கச்சா எண்ணெய், 10 லிட்டர் பெட்ரோலைக் கொடுத்தது. அங்கு வேலை செய்தவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 15 யூரோக்கள் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. இது அவர்களின் மற்ற வேலைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். இதைப் பார்த்த பலரும் விபரீத வேலைக்குப் படகை எடுத்துக் கொண்டுக் கிளம்பினார்கள். அலையாத்திக் காடுகளில் கச்சா எண்ணெய் தயாரிப்பது அவ்வளவாக வெளியே தெரியாத வண்ணம் செயல்பட்டார்கள். அதற்கு சூழலும் இயற்கையும் அவர்களுக்கு ஒத்துழைத்தது. அரசோ ராணுவமோ அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது அவ்வளவு கடினமான வேலையாக இருந்தது. அப்படியே ராணுவத்திடம் சிக்கிக் கொண்டாலும் பணத்தையும், பெட்ரோல் பேரல்களையும் கொடுத்து அவர்களிடமிருந்து தப்பித்தார்கள். ஏனெனில். பெட்ரோலும் பத்தும் செய்யும்.
தயாரித்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய்யை உள்ளூரில் விற்பனை செய்தனர். பெட்ரோலுக்கு விலை அதிகம் என்பதால் பக்கத்து நாடான பெனின் நாட்டின் துறைமுக நகரமான போர்டோ நோவாவுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்தனர். பெட்ரோலை உற்பத்தி மட்டுமே செய்தவர்கள் கடத்தல்காரர்களாகவும் மாறினர். கடல் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் பெட்ரோலை கடத்தினர். பைக்கில் 700 லிட்டர் பெட்ரோலை 14 கேன்களில் நிரப்பித் தனி ஒருவராக எடுத்துச் சென்றனர். கொஞ்சம் சறுக்கினாலும் மரணம் தான். தவறி விழுந்து ஒரு தீப்பொறி கிளம்பினாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை. எல்லாம் தெரிந்தும் பெட்ரோல் கடத்தும் வேலையைச் செய்ய பலரும் முன் வந்தனர். பெட்ரோல் கடத்துவது ஒரு திறனாகப் பார்க்கப்பட்டது. தவறி விழுந்தவர்கள் இறந்தனர். எண்ணெய் நிறுவனங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினர். தனியார் பாதுகாவலர்களை நியமித்தார்கள். அரசுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக மாறியது. ராணுவம் பெட்ரோல் தயாரிக்கும் இடங்களையும், மனிதர்களையும் தேடி வேட்டையைத் தொடங்கியது. ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை. அலையாத்திக் காடுகள் அவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருந்தது.
பெட்ரோல் ஏற்றுமதியால் கடத்தல்காரர்களிடமும் மக்களிடமும் தாராளமாகப் பணம் புழங்க ஆரம்பித்தது, ஆயுதங்கள் வாங்கினார்கள், குரூரம் வளர்ந்தது, கொலைகள் நடந்தன. ஊரே ஆயில் மயமானது, உண்பது, உறங்குவது, வாழ்வது என எல்லாமே ஆயில் மயமானது. வீடுகளில் பெட்ரோலை பிரித்தெடுக்கத் தொடங்கினார்கள். பேரல்கள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பெட்ரோல் தயாரிக்க இடம் அதிகமாகத் தேவைப்பட்டது. தயாரித்த பெட்ரோலை பயன்படுத்திக் காடுகளை அழித்தார்கள். பல ஏக்கர் காடுகளை தீயிட்டுக் கொளுத்தி அவர்களுக்கென ஒரு இடம் அமைத்துக் கொண்டார்கள். இப்படிப் பல கூடாரங்கள் அலையாத்திக் காடுகளுக்குள் அமைக்கப்பட்டன. 50 வருடங்களுக்கு முன்பு செழிப்போடும் பச்சை பசேல் என இருந்த ஆறுகளின் கதை உருமாறத் தொடங்கியது. பல வரலாறுகளில் குறிப்பிடப்பட்ட ஆறு முற்றிலும் அழிக்கப்பட்டது. ஆறுகளில் கச்சா எண்ணெய் முழுவதுமாகப் படர்ந்து கிடந்தது. பெட்ரோலைப் பிரித்து எடுத்துப் போக மீதிக் கழிவுகளும் ஆற்றில் கொட்டப்பட்டன. ஆறுகளில் முற்றிலும் மீன்கள் இல்லாமல் போயின.
20 லிட்டர் கச்சா எண்ணெய்யில் இருந்து 10 லிட்டர் பெட்ரோல் பெறப்பட்டது. மீதி கழிவாக ஆற்றில் கொட்டப்பட்டது. ஆறு அழிக்கப்பட்டது. மீன்கள் இறந்தன, மீனவனும் சட்ட விரோதமாக பெட்ரோல் தயாரிக்கக் கிளம்பினான். சட்ட விரோதச் செயல்கள் கண்காணிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டன. இருந்த இயற்கையையும் அழித்தாகி விட்டது. வேறு வழியில்லை, மனித இனம் ஒவ்வொரு இழப்புக்குப் பிறகும் ஒரு புதிய யோசனையைக் கையில் எடுக்கும். நைஜீரிய மக்கள் யோசனை மீண்டும் இயற்கை பக்கமே திரும்பியது. ஆறு தான் நாசமாகி இருந்தது, ஆனால் ஆற்றில் மணல் இருந்தது கண்களை உறுத்தியது. ஆற்று மணலை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள், விலைக்கு வாங்க சிமென்ட் கம்பனிகள் முளைத்திருந்தன. ஆறோடு சேர்ந்து மணலும் போனது. ஒரு தலைமுறையின் வாழ்க்கையும் கனவும் இப்படித் தான் இல்லாமல் போனது. அரசு பெட்ரோல் தயாரிப்பவர்கள் மீதும், கிடங்குகள் மீதும் தாக்குதலைத் தொடுத்தது . பலருடைய உயிர் போனது. தீவிர நடவடிக்கை காரணமாக சட்ட விரோத பெட்ரோல் தயாரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. 2016-ல் முற்றிலும் சட்ட விரோதமாக பெட்ரோல் தயாரிப்பது தடை செய்யப்பட்டது. ஆனால், காலம் மீண்டும் தன்னை சீரமைத்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கை பொய்யானது. மக்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப இயற்கை ஒத்துழைக்கவில்லை. இழப்புகளை எல்லாம் கடந்து எல்லா தவறுகளையும் சரி செய்து மீண்டு வருவதற்குள் காலம் அடுத்த தலைமுறையை அம்மக்களின் கையில் கொடுத்திருக்கிறது