வாமனன் உலகளந்ததைக் குறிக்கும் ஆதாரங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை ஓண நன்னாளாம் இன்று அறிவோம். தெய்வத் தமிழில் செறிவோம்!
1. "இருநிலங்கடந்த திருமறு மார்பின், முந்நீர்வண்ணன்"
(பெரும்பாணாற்றுப்படை 29- 31) என உருத்திரங்கண்ணனார் பாடுகிறார்.
2. திருவோண நட்சத்திரம் திருமாலுக்கு உரியது. சங்க கால இலக்கியங்களில் திருமாலின் பிறந்த நாளென்றும் வாமன மூர்த்தி அவதரித்த நட்சத்திரம் திருவோணம்தான் என்றும் குறிப்புகள் உள்ளன. சங்க கால இலக்கியமான 'மதுரைக் காஞ்சி'-
'மாயோன் மேய ஓண நன்னாள்' என்று குறிப்பிட்டுப் பாடுகிறது.
1. "இருநிலங்கடந்த திருமறு மார்பின், முந்நீர்வண்ணன்"
(பெரும்பாணாற்றுப்படை 29- 31) என உருத்திரங்கண்ணனார் பாடுகிறார்.
2. திருவோண நட்சத்திரம் திருமாலுக்கு உரியது. சங்க கால இலக்கியங்களில் திருமாலின் பிறந்த நாளென்றும் வாமன மூர்த்தி அவதரித்த நட்சத்திரம் திருவோணம்தான் என்றும் குறிப்புகள் உள்ளன. சங்க கால இலக்கியமான 'மதுரைக் காஞ்சி'-
'மாயோன் மேய ஓண நன்னாள்' என்று குறிப்பிட்டுப் பாடுகிறது.
3. கலித்தொகை - நெய்தற் கலி 124இல்,
''ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப் பால் அன்ன மேனியான்''
-என ஞாலத்தை மூவடியால் அளந்தவராக மாலவன் குறிக்கப்படுகிறார்.
4. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் (55),
திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி
நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார்
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால் பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ, நின் மரபறி வோர்க்கே?
-எனப் பாடுகிறது.
திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம். இதனை நீ உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய் (வாமன அவதாரம்). உன் உருவைக் கண்டு கலங்கிய அவுணர் (அசுரர்கள்) சிதறி ஓடினர், அவர்களுள் உன்னைச் சரணடைந்தோர்க்கும் நீயே முதல்வன் ஆகிறாய். அதனால், உனக்குப் பகை என்பதும், நட்பென்பதும் கிடையாது. இதனை உனது மரபை அறிந்தோர் நன்றாக அறிவர் - என்பது இதன் பொருள்.
5. இலக்கண முதன்மை நூலான தொல்காப்பியத்துக்கு நச்சினார்க்கினியர் இயற்றிய உரையில், மாயவனே நிலங்கடந்த நெடுமுடி அண்ணலாக குறிப்பிடப்படுகிறார்:
" துவராபதி போந்து நிலங்கடந்த
நெடுமுடியண்ணல் வழிக் கண்ணரசர்
பதினெண்மாயும், பதினெண்குடி
வேளிருள்ளிட் டாரையு மருவா
ளரையுங் கொண்டு போந்து காடு
கெடுத்து நாடாக்கி".
(தொல்: எழுத்ததிகார உரை)
6. சிலப்பதிகாரத்தில், திருமாலை "மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி
நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல்" என இளங்கோவடிகள் குறிக்கிறார்.
7. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு’
-என்பது திருக்குறள் -610.
தம் அடிகளால் இவ்வுலகம் முழுவதையும் அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு முழுமையும் சோம்பலில்லாத மன்னன் அடைவான் என்பது இக்குறளின் முழுமையான பொருள்.
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்! சிறியன் சாலவே!
-என்று கம்ப ராமாயணத்தின் பாலகாண்டம் வேள்விப் படலத்தில் (26) வாமன அவதாரச் சிறப்பை விவரிக்கிறார் கம்பர்.
9. தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய்*
மூவுருவின் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பாங் கோயில்
சேவலொடு பெடையன்னம் செங்கமல மலரேறி ஊசலாடி
பூவணைமேல் துதைந்தெழு செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே
-என்பது பெரியாழ்வார் திருமொழி (4-9-9). இப்பாடலில் 'குறள்' எனக் குறிக்கப்படுகிறார் வாமனர்.
10. "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி" என ஆண்டாள் பாவைப் பாசுரத்தில் மாயவனைத் துதிக்கிறாள்.
இவ்வாறாக தமிழ் இலக்கியங்கள் போற்றிப் பரவும் வாமனனை, மாலவனை, நாரணனை, திருவோணத் திருநாளில் வணங்கி மகிழ்வோம்!
நமது மரபின் தொன்மையையும், பாரம்பரிய நீட்சியையும், தமிழின் இறைமையையும் அளக்க வாமனனின் மூவடியே அளவுகோல்.
அனைவருக்கும் ஓணத் திருநாள்
நல்வாழ்த்துக்கள்!
-வ.மு.முரளி.