
நான் வகுப்பெடுக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்,
`உங்களை போலீஸ் புடிச்சிட்டு போயிடுவாங்களாமே சார்!'ன்னு என்கிட்ட
கேக்குறாங்க.
எனக்கு வகுப்புக்கு போறதுக்கே அசிங்கமா இருக்கு.
குடும்பப்
பிரச்னைகளால் வாங்கிய கடனுக்கு சில மாதங்கள் வட்டி கட்ட முடியாத சூழல்
ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே வட்டிக்குப் பணம் கொடுத்த ஆசிரியை
பஞ்சவர்ணம், கந்துவட்டி கேட்டு மிரட்டி ஆசிரியர் கோபாலை டார்ச்சர்
செய்திருக்கிறார். ஆள் வைத்து மிரட்டுவது, பள்ளி வகுப்பறையில் மாணவர்கள்
முன்னிலையிலேயே பார்வைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி அசிங்க அசிங்கமாக
பேசுவது என ஏகத்துக்கும் குடைச்சல் கொடுக்க ஆசிரியர் கோபால் நொந்து
போயிருக்கிறார்.
அதையடுத்து, கந்துவட்டி கேட்டு கொடுமை செய்யும்
ஆசிரியை பஞ்சவர்ணம் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்
கொடுத்திருக்கிறார். அந்தப் புகாருக்குப் பிறகும் தொடர்ந்து அசல் மற்றும்
வட்டித்தொகையைக் கேட்டு தொந்தரவு கொடுத்திருக்கின்றார். இதுபோதாதென்று
பஞ்சவர்ணத்துக்கு நெருக்கமான வட்டாரக் கல்வி அலுவலரும், `முதலைமைச்சர்
தனிப் பிரிவில் புகார் கொடுத்தால் நீ பெரிய ஆளா, ஏமாற்றுக்காரா' என கோபாலை
சகட்டு மேனிக்கு வசைபாடியிருக்கிறார். இதற்கிடையே, வட்டியோடு சேர்த்து
எல்லா தொகையையும் கோபால் செட்டில் செய்திருக்கிறார். இருந்தும் புகாரை
வாபஸ் வாங்கச் சொல்லி தொடர்ந்து மிரட்டியும், உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்படுத்தியும் பஞ்சவர்ணம் மிரட்டுவதாக கண்ணீரோடு ஈரோடு எஸ்.பி-யிடம் மனு
அளிக்க வந்திருந்தார் கோபால்.
அவரிடம்
பேசுகையில், ``கடன் கொடுப்பதற்கு முன்பு வரை 3 ரூபாய் வட்டியென சொன்ன
ஆசிரியை பஞ்சவர்ணம், கையில் பணத்தைக் கொடுக்கையில் 5 ரூபாய் வட்டி என
வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துக் கேட்டார். என் குடும்பச்
சூழ்நிலையால்தான் கடன் வாங்கினேன். எட்டு மாதங்கள் சரியாக பணம் கட்டி வர,
ஒருசில மாதங்கள் கொடுக்க முடியாமல் போனது. கூடிய விரைவில் மீதிக் கடனை
வட்டியோடு சேர்த்துக் கொடுத்து விடுகிறேன் என பலமுறை கெஞ்சியும், என்னை
விடாமல் டார்ச்சர் செய்தார். பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது
வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்கள் முன்னிலையிலேயே அசிங்க அசிங்கமாக பேச,
நான் மனதளவில் உடைஞ்சு போயிட்டேன். வட்டாரக் கல்வி அலுவரும் என்னை
ஒருமையில் திட்டினார். அதனால்தான் சி.எம் செல்லில் புகார் கொடுத்தேன்.
இப்போ, எல்லாக் கடனையும் கட்டிட்டேன். ஆனா, என்கிட்ட வாங்குன வெத்துப்
பத்திரத்தை தர மாட்டேங்குறாங்க. சி.எம் செல்லில் கொடுத்த புகாரை வாபஸ்
வாங்கச் சொல்லி வகுப்பறைக்கே வந்து மிரட்டுறாங்க. நான் வகுப்பெடுக்கும்
ஒன்றாம் வகுப்பு மாணவர்கள், `உங்களை போலீஸ் புடிச்சிட்டு போயிடுவாங்களாமே
சார்!'ன்னு என்கிட்ட கேக்குறாங்க. எனக்கு வகுப்புக்கு போறதுக்கே அசிங்கமா
இருக்கு. இனியும் என்னை அவங்க டார்ச்சர் செய்யாம, நான் நிம்மதியா வேலை
பார்க்க போலீஸ் நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.
ஆசிரியை
பஞ்சவர்ணத்திடம் பேசினோம். ``திருமணத்துக்கு பணமில்லாம கஷ்டப்படுறேன்னு
சொல்லவும் பரிதாபப்பட்டு ஜாமீன் போட்டு வெளிய கடன் வாங்கிக் கொடுத்தேங்க.
அந்தக் கடனை கேக்கப் போனா, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என்னை
அசிங்கப்படுத்துறாரு. பணம் கேட்டு நான் அவரை எந்தவிதமான மிரட்டலும்
செய்யலை. அவர் என்மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை வைக்கிறார். இதனால்
நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கேன்" என்றார்.