அமைதி… அமைதி!
கோபம் உச்சத்தில் இருக்கும்போது எதையும் பேச வேண்டாம். கோபம் தணிந்து மனம் அமைதியானதும், அது தொடர்பான கருத்தைத் தெரிவியுங்கள். இந்த அணுகுமுறை யாரையும் பாதிக்காமல் உங்கள் கருத்தை வெளிப்படுத்த உதவும்.
உடற்பயிற்சி
நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். ஜாகிங், மூச்சுப்பயிற்சி போன்ற இலகுவான உடற்பயிற்சிகள் கோபத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்!
கோபத்தில் ஏதாவது பேசிவிட்டு, பிறகு வருந்திக் கொண்டிருப்போம். இது போன்ற சூழலை வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்திலாவது எல்லோருமே கடந்து வந்திருப்போம். கோபம் வரும்போது எதையும் யோசிக்காமல் சட்டென்று வார்த்தைகளை விடுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு நன்றாகச் சிந்தித்துப் பேச வேண்டும்.
காரணம் கண்டறியுங்கள்!
எதற்காகக் கோபம் வந்ததோ, அதன் ஆணிவேரைக் கண்டறிந்து அதை நீக்க வேண்டும். அதன் மூலம் மீண்டும் அதே பிரச்னை நிகழாமல் தடுக்கலாம். கோபம் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு தராது; அது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும் என்பதை உங்களுக்கு நீங்களே அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
காழ்ப்புணர்ச்சி வேண்டாம்!
எதிர்மறை உணர்வுகள் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பிறர் மீதான காழ்ப்புணர்ச்சியை விட்டுவிட்டு மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மன்னிக்கும் குணம் மற்றவருடன் ஆரோக்கியமான நட்பை வளர்ப்பதுடன் மன அழுத்தம், எதிர்மறை உணர்வுகளை அண்ட விடாது.
*
மனசே ரிலாக்ஸ்!
கோபம் கட்டுங்கடங்காத நிலையில் இருக்கும்போது, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான உத்திகளைக் கையாளுங்கள். மூச்சை இழுத்துவிடலாம்; ‘கூல் டவுண்’ போன்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்லலாம்; தண்ணீர் அருந்தலாம். `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம்போலச் சிரித்துக்கொண்டே இருக்கலாம்.
குட்டி பிரேக்
மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கும்போது உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். பிடித்த உணவை உண்பது, கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வது என உங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம். அன்றாட வேலைப்பளுவுக்கு இடையே சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வது மனதை லேசாக்கி, கோபத்தைத் தடுக்கும்.