இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 29-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.இருந்தபோதிலும், உள்ளாட்சி தேர்தல் காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. இந்தநிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நடவடிக்கைகள் 4-ந் தேதி முடிவு பெறுகிறது.
இதனால், ஜனவரி 5-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதாவது, தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அதற்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய அனைத்தையும் தமிழக அரசு கொள்முதல் செய்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் பாக்கெட்டுகளில் அடைத்து தயாராக வைத்துள்ளது.
பொங்கல் பரிசு தொகைக்கு தேவையான ரொக்கப்பணமும் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைதாரர்கள் நெரிசல் இன்றி முறையாக பொங்கல் பரிசு தொகுப்பை பெற 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளில் சுழற்சி முறையில் தெருக்கள் அல்லது பகுதி வாரியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜனவரி 5-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 2-ந் தேதிக்கு மேல் வெளியாகும் எனவும் கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.








