சிம்ம லக்கினம்.
ஸ்திர லக்கினங்களில் சிறப்பு வாய்ந்த லக்கினம் ஒளி லக்கினமாக இருக்கிறது.லக்கின அதிபதி சூரியனே ஜோதிடத்தின் நாயகன் ஆவார். அவர் தரும் ஒளியை கொண்டே பிற கிரகங்கள் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பொதுவாக யாருக்கு பிரச்சனை வரும்? ஒரு செயலில் ஈடுபடுபவர்களுக்கு பிரச்சனை வரும்.அந்த செயலின் ஆதியும் அந்தமுமாக இருந்து தலைமை பொறுப்பில் இருந்தால் இன்னும் அதிகமாகவே பிரச்சனை ஏற்படும். அது போலவே சிம்மத்திற்கும் ஜோதிட ரீதியாக எதிரிகள் ஏராளம்.
கவனமாக இருக்க வேண்டிய தசா புக்திகள்.
சிம்ம லக்கினத்தின் அவ யோக கிரகங்களில் முதன்மையான கிரகமாக சொல்ல படுவது சாட்சாத் சனி பகவானே ஆவார். ஆயினும் அவருக்கு கொல்லான் என்ற அடிப்படையில் உயிரை எடுக்காமல் எல்லாவற்றையும் எடுப்பார்.ஆயினும் அவர் பிரச்சனை இல்லை.
இங்கே சிம்மம் கவனமாக இருக்க வேண்டியது சில தசா புக்திகளில்.ஸ்திர லக்கினங்களுக்கு பாக்கியதிபதியே பாதகாதிபதியாக செயல் படுவார்.அந்த வகையில் 9ம் அதிபதியான செவ்வாய் செயல்படுவார்.மாரகாதிபதி மற்றும் அட்டமாதிபதி பொறுப்பு குருவிற்கு கொடுக்க பட்டுள்ளது. சுக்கிரனும் இன்னொரு மாரகாதிபதி ஆவார்.அந்த வகையில்
1.குரு தசையில் சுக்கிர புக்தி
2.குரு தசையில் செவ்வாய் புக்தி
3.செவ்வாய் தசையில் சுக்கிர புக்தி
4.செவ்வாய் தசையில் குரு புக்தி.
5.சுக்கிர தசையில் குரு புக்தி
6.சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி.
மேலே கூறிய தசா புக்தியில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.ஏனெனில் சிம்மம் என்று சொன்னால் சனியை மட்டுமே கையை காட்டி விடும் பழக்கம் இங்கே அதிகம் உள்ளது. அதை தாண்டியும் சில விஷயங்கள் உள்ளன.
நன்மை தரும் தசைகள்.
வழக்கம் போல் திரிகோண ஸ்தானதிபதிகள் நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் 5,9 க்கு உரியவர்களாகிய குருவும் செவ்வாயும் நன்மை செய்ய கடமை பட்டவர்கள். பஞ்சமாதிபதியே அட்டமாதிபதியாகவும், பாக்கியதிபதியே பாதகாதிபதி யாகவும் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.நன்மை தீமைகள் இரண்டும் கை மீறி செல்ல முடியாத அளவுக்கு பார்த்து கொள்வார்கள்.அந்த வகையில்
1.சூரிய தசை செவ்வாய் புக்தி
2.சூரிய தசையில் குரு புக்தி
3.செவ்வாய் தசையில் சூரிய புக்தி
4.குரு தசையில் சூரிய புக்தி.
மேலே கூறிய நான்கு தசா புக்திகள் நிச்சயம் நன்மை தரும்.
5.குரு தசையில் செவ்வாய் புக்தி
6.செவ்வாய் தசையில் குரு புக்தி
ஆகிய இரண்டு தசா புக்திகள் நன்மைகள் தரும் என்றாலும் அவர்கள் இருவருக்கும் பாதகாதிபதி மற்றும் அட்டமாதிபதி பொறுப்பும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.எனினும் 8ம் இடம் மற்றும் 9ம் இடத்தோடு அதிகம் தொடர்பு கொள்ளும் போது மட்டுமே சற்று சிக்கல்களை தருவார்கள்.மற்ற நேரங்களில் லக்கின சுபராகவே செயல்படுவார்கள்.
சூரியனின் நண்பராக சொல்லப்படும் குரு அட்டமாதிபதி, செவ்வாய் பாதகாதிபதி ,சந்திரன் விரையாதிபதி .. அவரது பகைவர்களான சுக்கிரன் மாரகாதிபதி, சனி ருண ரோக சத்ரு ஸ்தானாதிபதி.. இவர்களோடு ராகு கேதுக்கள் வேறு.
ஒரு லக்கினத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு இடைஞ்சல்கள்? அதன் தார்ப்பரியம் யாதெனில் அரசனுக்கு நண்பர்கள் நன்மை மட்டுமே செய்வார்கள் என்று நம்பினால் துரோகத்தால் வீழ்த்தப்படுவார்கள்.அப்படி வீழ்த்தப்பட்ட அரசர்கள் வரலாற்றில் ஏராளம்.
எனவே சிம்ம லக்கினகாரர்கள் இறுதியில் ஒருவரை மட்டுமே நம்பி களம் இறங்கி வெற்றி பெற முடியும். அது நான் என்கிற நீங்கள் மட்டுமே.ஆம் லக்கின அதிபதி சூரியன் லக்கினம் என்னும் ஒற்றை ஆதிபத்தியம் மட்டுமே வகிக்கிறார்.ஆதித்யன் என்றாலே ஆளுமை தானே!!..நீங்களே மற்றவர்களையும் காப்பாற்ற முடியும். ஏனெனில் சூரியனிடம் இருந்து பிற கிரகங்கள் ஒளியை பெற்று ஜோதிடத்தில் செயல்படுவது போல் நீங்களே பிறரையும் அவர்களின் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற முடியும்.
மனைவிமார்களோடு அதிக பிரச்சனை ஏற்படவும் செய்யும்.ஆயினும் அதுவே விதி என்பதை புரிந்து கொண்டால் இல்லறமும் இனிக்கும்.பிறருக்கு உதவி செய்யும் போது நல்லறமும் சிறக்கும்.
.....நன்றி....









