தமிழக தலைநகர் சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலை விரித்தாடி வருகிறது. ஒரு இடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவது என்பது, ஏதோ போர்க்களத்திற்கு சென்று வருவதை போல் ஆகி விட்டது. எனவே போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
"
தமிழக தலைநகர் சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலை விரித்தாடி வருகிறது. ஒரு இடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவது என்பது, ஏதோ போர்க்களத்திற்கு சென்று வருவதை போல் ஆகி விட்டது. எனவே போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புறநகர் ரயில் சேவை, பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை ஆகியவை சென்னையில் ஏற்கனவே உள்ளன. இந்த வரிசையில், புதிதாக மேலும் ஒரு ரயில் போக்குவரத்து முறையை அறிமுகம் செய்ய அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது. சென்னை மாநகரில் புதிய ரயில் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பு ஆளுநர் உரையில் வெளியாகியுள்ளது.
எல்ஆர்டி (LRT - Light Rail Transit) என சுருக்கமாக அழைக்கப்பட்டு வரும் லைட் ரயில் போக்குவரத்து முறையைதான் சென்னையில் புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதனை இலகு ரயில் போக்குவரத்து முறை என்றும் சொல்லலாம். உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது லைட் ரயில் போக்குவரத்து முறை பயன்பாட்டில் உள்ளது.
சிட்னி (ஆஸ்திரேலியா), ஒட்டாவா (கனடா), சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா) உள்ளிட்ட நகரங்களில், லைட் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சிங்கப்பூர், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் பல்வேறு நகரங்களிலும் கூட லைட் ரயில்கள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது சென்னைக்கும் லைட் ரயில்கள் வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது. லைட் ரயில்கள் பார்ப்பதற்கு டிராம்களை போன்ற தோற்றத்தில் இருக்கும். ஆனால் டிராம்களை விட பல்வேறு அதிநவீன வசதிகள் லைட் ரயில்களில் இருக்கும். மற்ற வாகனங்களை போல், லைட் ரயில்களையும் சாலைகளின் வாயிலாகவே இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தற்போது அதிக செலவு ஆகி வருகிறது. ஆனால் லைட் ரயில் போக்குவரத்து முறை ஓரளவிற்கு சிக்கனமானதுதான். குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், குறைவான செலவிலேயே லைட் ரயில் போக்குவரத்து திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர இயலும்
அத்துடன் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு அதிக காலம் ஆகிறது. ஆனால் லைட் ரயில் போக்குவரத்து திட்டத்திற்கான கட்டுமான பணிகளை வெகு விரைவாகவே முடித்து விட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறுகலான வழித்தடங்களில் கூட லைட் ரயில்களால் எளிதாக சென்று வர முடியும்.
எனவே மிகவும் நெரிசலான அதே சமயம் வளைந்து நெளிந்து செல்லக்கூடிய பாதைகளை அதிகம் கொண்ட சென்னை போன்ற நகரங்களுக்கு லைட் ரயில் போக்குவரத்து முறை மிகவும் உகந்ததாக இருக்கும். மேலும் லைட் ரயில்களுக்கான ஸ்டேஷன்களை நிர்மாணிப்பதும் எளிதுதான். ஒட்டுமொத்தாக சொல்வதென்றால், லைட் ரயில் போக்குவரத்து முறைக்கான கட்டமைப்பு பணிகளை எளிதாக முடித்து விட முடியும்
லைட் ரயில் போக்குவரத்து முறையை, சென்னை மாநகரின் தாம்பரம்-வேளச்சேரி வழித்தடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. தாம்பரம் மற்றும் வேளச்சேரி இடையே சுமார் 15.5 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு லைட் ரயில் போக்குவரத்திற்கான வழித்தடம் அமைக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது.
சென்னைவாசிகள் இடையே இந்த செய்தி பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லைட் ரயில் போக்குவரத்து முறை முதலில் சென்னை நகரில் பரிசோதனை முயற்சியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதன்பின் தமிழகத்தின் மற்ற முக்கியமான நகரங்களுக்கும் லைட் ரயில் போக்குவரத்து திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டால் மகிழ்ச்சிதான்.









