
காரமான உணவை பலர் விரும்புவது ஏன்?
உலகில் பெரும்பாலானோர் காரசாரமான
உணவுகளை ருசிப்பதை விரும்புகின்றனர். இதன் சுறுசுறுப்பான சுவை பலரையும்
கவர்கிறது.
ஏறக்குறைய எல்லா நாட்டு மக்களும் வேறுபாடின்றி காரத்தை விரும்புகின்றனர்.
உலக அளவில் ஒரு நபர் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக ஏறத்தாழ 5 கிலோ மிளகாய்
சாப்பிடுகிறார் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
சில நாடுகளில் மிளகாய் சாப்பிடும் அளவு, மற்றவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது.
துருக்கியில் மக்கள் தினம் 86.5 கிராம் மிளகாய் சாப்பிடுகிறார்கள். இதுதான்
உலகிலேயே அதிகபட்ச அளவு. காரமான உணவுகளுக்குப் பிரசித்தி பெற்ற
மெக்சிகோவில் இது 50.95 கிராமகளாக உள்ளது. அதைவிட மிக அதிகமான காரத்தை
துருக்கி மக்கள் சாப்பிடுகிறார்கள்.
ஆக, காரமான உணவுகளை நாம் ஏன் விரும்புகிறோம்?
காரம் நமக்கு ஏற்படுத்தும் திரில் உணர்வு உள்ளிட்டவை அதற்கான காரணங்களாக இருக்கின்றன.
மிளகாய்க்கு காரமான தன்மையைத் தரும் கேப்சாய்சின் என்ற பொருள் உருவாக்கப்படுவதன் நடைமுறைகள் இன்னும் விவாதத்துக்கு உரியவையாக உள்ளன.
காலப்போக்கில் தாவரங்கள் காரத்தை வெளிப்படுத்தக்கூடியவையாக மாறியுள்ளன
என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விலங்குகளும், பூச்சி இனங்களும் தங்களை
சாப்பிட்டுவிடாமல் காப்பாற்றிக்கொள்வதற்காக காரமான தன்மையை அவை உருவாக்கிக்
கொண்டுள்ளன என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மிளகாய்ச் செடிகளுக்கு இது எப்படி சரியானதாக அமைந்தது என்பதை அமெரிக்காவில்
உள்ள அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நமது முன்னோர்களைத் தொடர்ந்து, மிளகாய் சாப்பிடும் ஒரே பாலூட்டி இனமாக மனிதன் மட்டும் தொடர்கிறான்.
பூசண எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புக் குணாதிசயங்கள் காரணமாக,
காரமான உணவு வகைகள் மனிதனுக்குப் பிடிக்கத் தொடங்கின என்பது ஒரு விளக்கமாக
இருக்கிறது.
காரமான ருசி கொண்ட உணவுகள் சீக்கிரம் கெட்டுப் போவதில்லை என்பது மக்களின்
எண்ணமாக உள்ளது. காரமாக இருந்தால் அது கெட்டுப்போகவில்லை என்பதன் அறிகுறி
என்று கருதப்படுகிறது.
கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் நிபுணர்கள் ஜெனிபர் பில்லிங்,
பால் டபிள்யூ ஷெர்மன் ஆகியோர் 1998-ம் ஆண்டில் இந்த விளக்கத்தை
முன்வைத்தனர்.
36 நாடுகளில் மாமிசம் சார்ந்த பாரம்பரியமான ஆயிரக்கணக்கான உணவுகளை அவர்கள்
ஆய்வு செய்தனர். உணவு கெட்டுப்போகும் வாய்ப்புள்ள, வெப்பமான காலநிலை உள்ள
நாடுகளில் காரமான உணவுப்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள்
கண்டறிந்தனர்.
‘‘வெப்பமான நாடுகளில், மாமிசம் சார்ந்த உணவுகள் அனைத்திலும் குறைந்தது ஒரு
காரமான உணவுப்பொருளாவது இருக்கும். பெரும்பாலானவற்றில் காரமான பொருள்கள்,
குறிப்பாக மசாலாப் பொருள்கள் நிறைய இருக்கும். ஆனால் குளிர் மிகுந்த
நாடுகளில் பெரும்பாலான உணவு வகைகளில் இவை குறைவாகவே இருக்கும்’’ என்ற
முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் காரமான
உணவுப்பொருட்களின் பயன்பாடு அதிகபட்ச அளவுக்கு உள்ளது. சுவீடன்,
பின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் இது குறைந்தபட்ச அளவாக உள்ளது.
காரம் சேர்த்தல், உலர வைத்தல், சமைத்தல், புகையிடுதல், உப்பிடுதல் ஆகிய
அனைத்துமே உணவில் ஒட்டுண்ணிகளால் நமக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடாமல்
தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே இருக்கின்றன.
உணவு ஆராய்ச்சியாளரான கவோரி ஓ’கானர் மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார்.
கரும்பு மற்றும் உருளைக்கிழங்குகளைப் போலவே, மிளகாய்களும் பல
நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்கள் அறியாத உணவுப்பொருளாக இருந்து வந்துள்ளது
என்று அவர் கூறுகிறார். ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு சென்று, வர்த்தக
உறவுகளை ஏற்படுத்திய பிறகுதான், மிளகாய் உலகெங்கும் பரவியது என்கிறார்
அவர்.