வீட்டுமனை திட்டங்களில் ஏற்படும்
சர்ச்சைகளை தீர்க்கவும், விதிகளை உருவாக்கவும், கட்டிட மனை விற்பனை
(முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய
அரசு உருவாக்கியது.
வீடு-மனை வாங்குபவர்களுக்கு உதவும் அரசின் இணையதளம்
வீட்டுமனை திட்டங்களில் ஏற்படும்
சர்ச்சைகளை தீர்க்கவும், விதிகளை உருவாக்கவும், கட்டிட மனை விற்பனை
(முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய
அரசு உருவாக்கியது. அதன் அடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு
கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள்
2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு கட்டிட மனை
விற்பனை ஒழுங்குமுறை குழுமம்’ (Tamil Nadu Real Estate Regulatory
Authority TNRERA) கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
அதனால், ரியல் எஸ்டேட் சந்தையில் நம்பகத்தன்மை ஏற்பட்டு, வீடு வாங்கும்
பொதுமக்களில் பலரும் ‘ரெரா’ ஒப்புதல் பெற்ற திட்டங்களை மட்டுமே வாங்க
வேண்டும் என்று அறிந்திருந்தாலும், சிலர் ‘ரெரா’ பற்றிய முக்கியத்துவத்தை
அறியாதவர்களாக உள்ளனர்.
முகவர் பதிவு அவசியம்
கட்டிடம்-மனை விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோர் ஒழுங்குமுறை
குழுமத்தில் பதிவு செய்யாமல் கட்டிடம்-மனை திட்டங்களை விற்பனை செய்ய
இயலாது. அதே போன்று சொத்து விற்பனையாளர்கள், தரகர்கள், இடைத்தரகர்கள் என்று
எந்தவொரு பெயரில் தொழில் செய்வோரும் தமிழ்நாடு கட்டிட மனை ஒழுங்குமுறை
குழுமத்தில் முகவராக பதிவு செய்து கொள்வது அவசியம். அதை குழுமத்தின்
இணையதளத்தில் உள்ள முகவர்கள் பட்டியல் மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.
அனைத்துவிதமான தகவல்கள்
வீடு-வீட்டு மனைத்திட்டங்கள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் 500 சதுர
மீட்டருக்கு மேல் அல்லது குடியிருப்புகள் 8 அலகுகளுக்குமேல் இருப்பின்
பதிவு செய்வது அவசியம். ‘ரெரா’ சட்டத்தில் பதிவு செய்யப்படாத சொத்துக்களை
வாங்கும் நிலையில், ஏதாவது சிக்கல்கள் எழும்பட்சத்தில் ஒழுங்குமுறை
குழுமத்தில் புகார் அளிக்க இயலாது. அதனால் வீடு அல்லது மனை வாங்க முடிவு
செய்துள்ள பொதுமக்கள், கட்டுநரின் பெயர், முகவரி, வங்கி தகவல்கள்,
நிறுவனத்தின் பெயர், முகவரி, திட்டம் பற்றிய தகவல்கள், திட்டத்தின்
தற்போதைய நிலை, எப்போது முடிவடையும், ‘கார்பெட் ஏரியா’ போன்ற தகவல்களை
www.tnr-e-ra.in என்ற இணைய தளத்தின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட வீட்டுமனை அல்லது கட்டுமானத் திட்டம் எந்த ஆண்டில் பதிவு
செய்யப்பட்டது என்பதை அறிந்து அந்த ஆண்டை தேர்வு செய்து (2017, 2018
மற்றும் 2019 ஆகிய ஆண்டுகள் குறிப்பிடப்பட்டிருக்கும்) திட்டம் குறித்த
விபரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
சட்டப்படி நடவடிக்கைகள்
அந்த இணைய தளத்தில், பதிவு செய்யப்பட்ட திட்டங்கள் மட்டுமல்லாமல் பதிவு
மறுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் திரும்ப பெறப்பட்ட திட்டங்கள் ஆகிய
விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ள
திட்டம் என்றால் அது இணைய தளத்தில் பதிவு மறுக்கப்பட்ட திட்டங்களின்
பட்டியலில் இல்லை என்பதை அறிந்து செயல்படுவது அவசியம். பதிவு செய்து
கொள்ளாத ரியல் எஸ்டேட் முகவர்களிடம் வீடு-மனை உள்ளிட்ட அசையா சொத்துகளை
வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர்,
கட்டுமான திட்டங்களை சரியான நேரத்தில் முடித்து கொடுக்காத கட்டுனர்களின்
மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.