
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தியபோது எடுத்தபடம்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது
குறைகளை கோரிக்கை மனுக்களாக கலெக்டரிடம் கொடுக்க வந்திருந்தனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் பகுதியை சேர்ந்த குமரவேல்(வயது
40) என்பவரும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது
அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த பையில் இருந்து மண்எண்ணை கேனை
எடுத்தார். பின்னர் மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி குமரவேல் தீக்குளிக்க
முயன்றார்.
அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்
அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கையில் இருந்த மண்எண்ணை கேனையும்
கைப்பறினார்கள். பின்னர் குமரவேலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது
அவர் கலெக்டரிடம் கொடுக்க வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பி.ஏ.பி.எட். படித்துள்ளேன். பல்வேறு அரசு பொதுத்தேர்வுகளிலும் பங்கேற்று தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளேன்.
தற்போது நடந்து முடிந்த குரூப்-4 தேர்விலும் கலந்து கொண்டு 178 மதிப்பெண்
பெற்றேன். ஆனால் எனக்கு இதுவரை எந்தவித அரசு வேலையும் கிடைக்கவில்லை.
எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
போதுமான வருமானம் இல்லாததால் எனது குடும்பம் வறுமையில் வாடுகிறது. இதனால்
வாழ்க்கையில் விரக்தி அடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு
செய்து இன்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் பட்டதாரி வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற வாலிபர்
குமரவேலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து
கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.