
பிள்ளைகளின் பொதுத்தேர்வும்... சர்க்கரை நோயும்...
தமிழகத்தில் பீதியை உண்டாக்கும்
வகையில் சர்க்கரை நோய் பரவி வருகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்,
3-ம் பாலினத்தவர் என பாகுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். தலைமுறை
மற்றும் உணவுப்பழக்க வழக்கம் ஆகிய காரணங்களால் சர்க்கரை நோய் பரவுவதாக
கூறப்படுகிறது. இந்த நோய் சிறுவர், சிறுமிகள் மற்றும் குழந்தைகளையும்
விட்டு வைக்கவில்லை. 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு வரும் சர்க்கரை
நோயை டைப்-1 ‘டயாபடிஸ்’ என அழைக்கின்றனர்.
இந்த நோயால் பிறந்த குழந்தை முதலே பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், குழந்தைகளை
பாதிக்கும் டைப்-1 சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில்
குறைவாகவே காணப்படுகிறது. பெற்றோரும் தங்களது குழந்தை சர்க்கரை நோயால்
பாதிக்கப்பட்டுள்ளதை வெளியில் சொல்ல வெட்கப்படுகின்றனர். இதற்கிடையே, கடந்த
சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் டைப்-1 சர்க்கரை நோய் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த
நிறுவனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கர்நாடக மாநில மந்திரிகள்,
எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நோய் குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து நடத்த வேண்டிய
அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்த மாநில அரசு
தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்
தொடங்கி உள்ளன.
அதன்படி,
இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் இன்சுலின்
மாத்திரைகள், ஊசி, சாக்லேட், மிட்டாய், பழங்கள், தின்பண்டங்கள், தண்ணீர்
பாட்டில் ஆகியவற்றை கொண்டு செல்லவும், சிறுநீர் கழிக்க தேர்வுக்கூட
கண்காணிப்பாளர்கள் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலும் தற்போது பொதுத்தேர்வு தொடங்கி உள்ளது. எனவே, தமிழகத்தில்
டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு இது போன்ற
சலுகைகளை வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று பெற்றோர் தரப்பில்
வலியுறுத்தப்பட்டு வருகிறது.