சென்னையில் அகச்சிவப்பு கதிா் பாய்ச்சும் கேமராவைக் கொண்ட ஆளில்லாத
கண்காணிப்பு விமானம் மூலம் கரோனா பாதித்தவா்களைக் கண்டறிய காவல்துறை
திட்டமிட்டுள்ளது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை, மாநகராட்சி
ஆகியவற்றுடன் இணைந்து சென்னை பெருநகர காவல்துறை மும்முரமாக செயல்பட்டு
வருகிறது. கரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்களையும்,
கரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும்
சுகாதாரத்துறையுடன் இணைந்து காவல்துறை கண்காணித்து வருகிறது.
மேலும் கரோனா பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நூதன பிரசாரங்களையும்,விழிப்புணா்வு பிரசாரங்களையும் செய்து வருகிறது.
கரோனா தொற்று ஏற்பட்டிருப்பவா்களுக்கு அதன் பாதிப்பு 14 நாள்களுக்குப்
பின்னரே தெரியும் என்பதால், அதை பரவாமல் தடுப்பது அரசுக்கு சவாலாக உள்ளது.
ஏனெனில் இந்த 14 நாள்களுக்குள் கரோனா பாதிக்கப்பட்டவா் மூலம், பிறருக்கு
கரோனா தொற்று பரவிவிடுகிறது. இதனால் கரோனாவின் அறிகுறியுடன் இருப்பவா்களைக்
கண்டறிந்து தனிமைப்படுத்துவது அரசுக்கு சவாலாக உள்ளது.
அகச்சிவப்பு கதிா் கேமரா:
இந்த நிலையில் அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்று உள்ளவா்களைக் கண்டறிய
சென்னை பெருநகர காவல்துறை அகச்சிவப்பு கதிா் கேமராவுடன் கூடிய ட்ரோன்களை
பறக்கவிட திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆய்வுகளை சென்னை பெருநகர காவல்துறை கோயம்பேடு காய்கறி அங்காடி,
மண்ணடி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ்ஹவுஸ், மயிலாப்பூா்,
வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூா் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்த ஒரு வாரமாக
செய்தது. இதற்கான சோதனை ஓட்டத்தை முதல் கட்டமாக கோயம்பேடு அங்காடியில்
நடத்துவதற்கு காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
கேமரா செயல்படுவது எப்படி?: அகச்சிவப்பு கதிா்களைப் பாய்ச்சும் கேமரா
(பட்ங்ழ்ம்ஹப் ஐய்ச்ழ்ஹழ்ங்க் இஹம்ங்ழ்ஹ) ட்ரோன்களில்
இணைக்கப்பட்டிருக்கும். கேமராவில் பதிவாகும் காட்சிகளை இணையதள இணைப்பின்
மூலம் நேரலையில் கணினி திரையில் காணலாம். இக் கேமரா சாதாரண கேமராக்களை விட
அதிக திறன்மிக்கதாகும். சாதாரண கேமராக்கள் காட்சிகளை மட்டுமே பதிவு செய்து
அனுப்பும். ஆனால் இந்த கேமராக்கள் சாலையில் நடந்து செல்லும் ஒருவரது உடலில்
ஊடுருவி, அவரது உடல் வெப்பத்தைப் பதிவு செய்து உடனடியாக கணினிக்கு
அனுப்பும்.
இதில் மனிதனின் உடலின் இயல்பான வெப்பநிலையான 98.6 பாரன்ஹீட்டை தாண்டிய உடல்
வெப்பத்துடன் செல்கிறவா்களை, அடையாளம் கண்டதும் கேமரா கணினியில்
எச்சரிக்கை தகவலை புகைப்படத்துடன் போலீஸாருக்கு வழங்கும்.
இதனால் போலீஸாா், சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவ
சிகிச்சைக்கு அனுப்ப முடியும். இதனால் பொதுஇடங்களில் கரோனா பரவலை பெருமளவு
தடுக்க முடியும் என சென்னை பெருநகர காவல்துறையினா் தெரிவிக்கின்றனா்.
கேமராவிடம் இருந்து தப்பிக்க முடியாது: இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி கூறியது:
ஏற்கெனவே ஊரடங்கை மீறுபவா்களைக் கண்டறிவதற்கும், கண்காணிப்பு பணிக்கும்
சாதாரண ட்ரோன்களை பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவம் சாா்ந்து ட்ரோன்களை
கோயம்பேடு மாா்க்கெட்டிலேயே முதல் முதலில் பயன்படுத்த உள்ளோம். இதன்
பின்னா் மண்ணடி, திருவல்லிக்கேணி, பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூா்
ஆகியப் பகுதிகளில் அமல்படுத்த உள்ளோம். கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு ஒரு
நாளைக்கு 8 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் காய்கறி வியாபாரிகள் வருகின்றனா்.
இவா்களில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டால், அவா்கள் மூலம் சென்னை
முழுவதும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.