கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில், அடுத்த நான்கு வாரங்களில், புதிதாக யாருக்குமே கொரோனா
பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்'
என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நம் நாட்டில் கொரோனா
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக
அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு, கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
கண்காணிப்பு
இந்த பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகள், தடுப்புகள் வைத்து
அடைக்கப்பட்டிருக்கும். வேறு பகுதிகளில் இருந்து வருவோர், இந்த
பகுதிகளுக்குச் செல்ல முடியாது. அதேபோல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்
வசிப்போர், அந்த பகுதிகளில் இருந்து வெளியில் வர முடியாது. இவர்களுக்கு
தேவையான அத்தியாவசியப் பொருட்கள், வீடுகளுக்கே சென்று
வழங்கப்படுகின்றன.சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள்,
போலீசார் உள்ளிட்டோர், இந்த பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து, மத்திய
சுகாதார சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:அடுத்த நான்கு
வாரங்களில், தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளில், கொரோனா உறுதி
செய்யப்பட்டவர்களிடம் இருந்து, புதிதாக யாருக்கும் வைரஸ் பரவில்லை என
உறுதியாக தெரியவந்தால், அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
இந்தப் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்
படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும், அதிகாரிகளின்
தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கடைசியாக ஒருவருக்கு கொரோனா உறுதி
செய்யப்பட்ட பின், அடுத்த, 28 நாட்களில், புதிதாக யாருக்கும் பாதிப்பு
ஏற்படாத சூழலில், சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும்.