வீட்டு வேலைப் பணியாளர்கள் பணிபுரிவதற்கான அனுமதி ரத்து - தமிழக அரசு
வீட்டு வேலைப் பணியாளர்கள் பணிபுரிவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 5)
வெளியிட்ட அறிவிப்பில், “மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு
உத்தரவினை மே 4-ம் தேதி முதல் மே 17-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில
தளர்வுகளுடன் நீட்டிப்புச் செய்ததன் அடிப்படையில் மே 3-ம் தேதி அரசாணை
வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்கள்
சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய
அனுமதி பெற்றுப் பணிபுரிய அனுமதிக்கப்பட்டது.
தற்போது, பொதுநலன் கருதி மே 3-ம் தேதி அன்று
வெளியிடப்பட்ட அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு பணிபுரிய
வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆகவே, வீட்டு வேலை செய்யும்
பணியாளர்கள் வரும் மே 17-ம் தேதி நள்ளிரவு ஊரடங்கு முடியும் வரை தாங்கள்
பணிபுரியும் வீடுகளுக்குச் செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.