கொரோனா தொற்று பரவலை தடுக்க, சென்னையிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், குறிப்பிட்ட சில பகுதிகளிலும், 19ம் தேதி முதல், நாளை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இன்று பகல், 2:00 மணி வரை, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்து இருக்கும். எனினும், பொதுமக்கள், 2 கிலோ மீட்டர் துாரத்திற்குள் நடந்து சென்று, பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில், 26ம் தேதி வரை, அனைத்து வங்கிகளும், 33 சதவீத ஊழியர்களுடன், காலை, 10:00 முதல், பிற்பகல், 2:00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஊழியர்கள், சுழற்சி முறையில் பணிக்கு வந்தனர்.
பெட்ரோல் நிலையங்கள், காஸ் ஏஜன்சிகளிடம் மட்டுமே, ரொக்க பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளுடன், வங்கிகள் செயல்பட்டன. பொதுமக்களின், நேரடி வங்கி சேவைக்கு அனுமதி தரப்படவில்லை. ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு பணம் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், மாதக் கடைசி என்பதால், இன்றும், நாளையும், 33 சதவீத ஊழியர்களுடன், அனைத்து வங்கிகளும், மாலை, 4:00 மணி வரை, வழக்கம் போல செயல்படும்; பொதுமக்கள் சேவைக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம், அரசு அறிவிக்கும் ஊரடங்கை பொறுத்தே, வங்கிகள் தொடர்ந்து செயல்படுமா என்பது தெரிய வரும். இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறுகையில், 'வங்கிகள் இன்றும், நாளையும் வழக்கம் போல, மாலை வரை செயல்படும். 'ஒரு வாரமாக வாடிக்கையாளர்களுக்கு, நேரடி சேவை கிடையாது. அதனால், யாரும் வரவில்லை. இன்று அனுமதி உண்டு என்பதால், அதிகமானோர் வங்கிகளுக்கு வரக் கூடும்' என்றனர்.








