கொரோனா தொற்றை ஒழிக்கவும், அதன் பரவலை தடுக்கவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் தொற்று பாதித்த குடும்பத்தினர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உதவ, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிர்வாகப்பணி, தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி இல்லாத ஆசிரியர்களுக்கு, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் வாயிலாக, கொரோனா தன்னார்வ பணி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை, அடையாறு மண்டலத்தில், சி.எம்.எஸ்., திடீர் நகர் அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவர், தன்னார்வ பணியில் ஈடுபட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதனால், கொரோனா தன்னார்வ பணியில் இருந்து, ஆசிரியர்கள் விலக துவங்கியுள்ளனர். மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டிய பணியில் உள்ள தங்களை, கட்டாய தன்னார்வ பணியில் இருந்து விடுவிக்குமாறு, கோரிக்கை விடுத்து உள்ளனர்.








