தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும், தமிழறிஞர்களையும், தமிழுக்கு தொண்டு செய்பவர்களையும் சிறப்பிக்கும் வகையில், திருவள்ளுவர் திருநாளில், விருதுகள் வழங்கப்பட உள்ளன.திருக்குறள் நெறி பரப்பு வோருக்கு, திருவள்ளுவர் விருது; பாரதியார் படைப்புகளை, முழுமையாக படித்து, ஆய்வு நடத்தி, பாரதி புகழ் பரப்பும் வகையில் தொண்டு செய்வோருக்கு, மகாகவி பாரதியார் விருது; சிறந்த கவிஞருக்கு, பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படும்.
சிறந்த தமிழ் எழுத்தாளருக்கு, தமிழ் தென்றல் திரு.வி.க., விருது; சிறந்த தமிழ் அறிஞருக்கு, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது; காமராஜர் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு, தொண்டாற்றி வரும் ஒருவருக்கு, காமராஜர் விருது; தமிழ் சமுதாயம் முன்னேற்றம் காண, அயராது பாடுபடும் ஒருவருக்கு, அண்ணா விருது வழங்கப்படும்.
இவ்விருதுகளை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தை, தமிழ் வளர்ச்சித் துறையின், www.tamilvalarchithurai.com என்ற, இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிப்போர் சுய விபர குறிப்புகளுடன், இரண்டு புகைப்படம், எழுதிய நுால்களின் பெயர் பட்டியல், அந்நுால்களின் ஒரு பிரதி ஆகியவற்றை, 'தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை' என்ற முகவரிக்கு, செப்., 30க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற, தொலைபேசி எண்களை, தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.








