தாய்ப்பால் குறித்த முக்கியமான சந்தேகங்களும் முழுமையான விளக்கங்களும்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தாய்ப்பால் குறித்த முக்கியமான சந்தேகங்களும் முழுமையான விளக்கங்களும்:

தாய்ப்பால்... நம் ஒவ்வொருவரின் உயிர்ப்பால். நம் கடைசி நாள் வரை நமது ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் தாய்ப்பாலின் பங்கு அதிகம். குழந்தையின் அடிப்படை உரிமை தாய்ப்பால். அதை முறையாகக் கொடுக்க வேண்டியது நமது கடமை.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் மகத்துவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் உலகம் அறியச் செய்யவே இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.
‘யுனிசெஃப்’ நிறுவனமும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஆறு மாதங்கள் முழுமையாகத் தாய்ப்பால் மட்டுமே கிடைக்கப் பெறும் குழந்தைகள் 55 சதவீதத்தினர் மட்டுமே. தாய்ப்பால் பற்றாக்குறையால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் சுமார் 2,36,000 குழந்தைகள் இறப்பைச் சந்திக்கின்றனர்.

இந்தியாவில் நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் ஆண்டு தோறும் சுமார் 1 லட்சம் குழந்தைகள் மரணத்தைத் தழுவுகின்றனர். இதைத் தடுக்க, குழந்தைப் பிறந்தவுடன், துரிதமாகத் தாய்ப்பால் தருவது, ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே தருவது ஆகியவற்றால் தடுத்து விட முடியும்.

தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைந்து விடும் என்ற மூட நம்பிக்கையில் இருந்து பெரும்பாலான பெண்கள் வெளியே  வந்து விட்டனர். குழந்தைக்குத் தேவையான தாய்ப்பாலை முழுமையாக அளித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் முறையான வழிகாட்டுதல் இல்லாமலும் உணர்வுத் தடுமாற்றங்களாலும் (Mood Swing) தாய்ப் பாலை சரியாகக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

தாய்ப்பாலின் முக்கியம், எப்படிக் கொடுக்க வேண்டும்? ஏன் கொடுக்க வேண்டும், காயமானால் என்ன செய்ய வேண்டும், பாலை அதிகரிப்பது எப்படி, எவ்வளவு நாட்கள் பால் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவாக விடையளிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் குணசிங்.

தாய்ப்பால் ஏன் முக்கியமானது, அவசியமானது?

தாய்ப்பால் ஒரு முழுமையான உணவு. அதிலும் குழந்தை பிறந்து முதல் 3 நாட்களுக்கு வரும் சீம்பாலில் (colostrum) அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின், இரும்புச்சத்து என எல்லாமே இதில் இருக்கிறது. அதேபோல எந்த மருந்திலும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. ஆனால் தாய்ப்பாலில் கிருமிகளை எதிர்க்கும் தடுப்பு மருந்து இருக்கும்.

அத்துடன் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் ஐ.க்யூ. சிறப்பாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் காதில் சீழ் வராது. சிறுநீர்த் தொற்றுக்கான வாய்ப்பு குறைவு. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, வயிற்றுப் போக்குக்கான வாய்ப்பு 9 மடங்கு குறைகிறது.

நிமோனியாவுக்கான வாய்ப்பு 5 மடங்கு குறைகிறது. ரத்தத்தில் நோய்த்தொற்று ஏற்படுவதும் கணிசமான அளவில் குறைகிறது. ஆஸ்துமா, உடல் பருமன், நீரிழிவு நோய் ஆகியவற்றின் மூலமான ஆபத்து குறைகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இதேபோல நன்மைகள் உண்டா?

குழந்தையைப் போலவே தாய்க்கும் பால் கொடுப்பதில் நிறைய பலன்கள் உண்டு. மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய், கருப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் குறைவு.

பிறந்த உடனே பால் கொடுப்பதால், தாயின் ரத்தப்போக்கு குறைந்து, ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஏறிய உடல் எடை, பால் கொடுக்கும் போது தானாகவே குறைகிறது. தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் பீரியட்ஸ் வரும் வாய்ப்பும் குறைவாக உள்ளது.

வேறு என்ன நன்மை உண்டு?

அதேபோல சமுதாயமும் இதனால் பலன் அடைகிறது. குழந்தைக்கு மற்ற பார்முலா உணவுகள் கொடுப்பது, வெளியில் பாலை வாங்கிக் கொடுப்பது,  இதர உணவுகளைக் கொடுப்பதால் அவர்கள் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனை செல்வது தாய்ப்பாலை முறையாக கொடுப்பதால் தடுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் மிச்சமாகின்றது.

குழந்தை பிறந்த பிறகு எவ்வளவு நேரத்தில் பாலூட்ட வேண்டும்?

பிறந்த உடனேயே. தொப்புள்க் கொடியை அறுப்பதற்கு முன்பாகக் கூட பாலூட்டலாம். குழந்தையைத் தாயின் அருகில் படுக்க வைக்க வேண்டும். இதன்மூலம் சிறிது நேரத்திலேயே தாய்க்கும் சேய்க்கும் இடையிலான பிணைப்பு உருவாகத் தொடங்கி விடும்.

குழந்தையே தாயின் பால் காம்புகளைத் தேடிப் பிடித்து பால் குடிக்க ஆரம்பித்து விடும். உடனே கொடு, கொடு என்று தாயையும் சேயையும் வற்புறுத்தக் கூடாது. குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள்ளாக கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

எப்படிப் பால் கொடுக்க வேண்டும்? எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்?

மார்பகத்தைக் கழுவி, சுத்தமான துணியால் துடைத்து விட்டுப் பால் கொடுக்க வேண்டும். ஈரம் இருக்கக் கூடாது. ஒரு மார்பகத்தில் உள்ள பாலை முழுமையாகக் கொடுத்து விட்டுத் தான் அடுத்த மார்பில் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் முதலில் தண்ணீர் போன்ற பாலும் (Foremilk) கடைசியில் கொழுப்பு நிறைந்த பாலும் (HindMilk) சுரக்கும். மார்பகங்களில் மாற்றி மாற்றிப் பால் கொடுக்கும் போது கொழுப்புச் சத்து குழந்தைக்குச் செல்லாது.

குழந்தைக்குப் பசி எடுக்கும் போதெல்லாம் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம்.

மார்புக் காம்பு காயமடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

முக்கியமான நான்கு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குழந்தையின் வாய் அகண்டு, திரண்டிருக்க வேண்டும். அதன் கீழுதடு வெளியே பிதுங்கி இருக்க வேண்டும். அடி மோவாய் மார்பை ஒட்டி இருக்க வேண்டும். மார்பகத்தின் கீழ் கருவட்டம் அதிகளவில் வாய்க்குள் போய் இருக்கவேண்டும். இந்த ஒட்டுதல், சரியாக இல்லாத பட்சத்தில் தான் காம்பில் காயம் ஏற்பட்டு, எல்லாப் பிரச்சினைகளும் துவங்குகின்றன.

காயம் அதிகமாக இருந்தால், குணமாகும் வரை பாலை பீய்ச்சி எடுத்துக் குழந்தைக்குக் கொடுக்கலாம். அப்போதும் பால் பவுடர் கொடுக்கக் கூடாது.

பால் அதிகமாகச் சுரந்தால் என்ன செய்வது?

தேவைக்கதிகமாக பால் சுரந்து, அது கட்டிக் கொண்டால் தாய்க்குப் பிரச்சினை. கட்டிய பாலையும் குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது. அதனால் கட்டிய பாலைக் கையோலோ, இயந்திரத்தாலோ பீய்ச்சி விட வேண்டும்.

எவ்வளவு நாட்களுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்?

குழந்தையின் முதல் 6 மாதங்களுக்கு முழுமையாக தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும். அதன்பிறகு தாய்ப்பாலையும் மற்ற சத்துள்ள உணவுகளையும் கொடுத்துப் பழக்கலாம். குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம்.

பால் போதுமானதாக உள்ளதா என்பதை எப்படி அறிவது?

மற்ற பால் கொடுக்கும் தாய்மார்களில் 99% பேர் சொல்வது, பால் போதவில்லை என்பது தான். எப்படி இதைக் கண்டு பிடிக்கலாம்? ஒவ்வொரு மாதமும் குழந்தை அரை கிலோ எடை கூடியிருக்க வேண்டும். தினந்தோறும் குறைந்தது 6 முறை வழக்கமான நிறத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும். இவை இரண்டும் சரியாக இருந்தாலே, போதுமான பால் குழந்தைக்குக் கிடைத்திருப்பதாக அர்த்தம் கொள்ளலாம்.

அடுத்ததாக குழந்தை அமைதியாக, திருப்தியுடன் இருப்பது, குடித்து விட்டுத் தூங்கி விடுவது ஆகிய அறிகுறிகளைக் கொண்டும் பால் போதுமானது என்று உணரலாம்.

போதிய அளவில் பால் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடன் இருந்தாலே பால் போதிய அளவில் இருக்கும். அப்படியும் இல்லாத பட்சத்தில், மற்ற வகைப் பாலை அறிமுகப்படுத்தலாம். ஆனால் திட உணவுகளைக் கொடுக்க வேண்டாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண் என்ன சாப்பிடலாம்/ கூடாது?

500 கலோரி, 15 கிராம் புரோட்டீன் அதிகமாகச் சாப்பிட வேண்டும். கீரை, காய்கறி, பருப்பு, கிழங்கு, நெய் அடங்கிய சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் 3 வேளை சாப்பிட்டால், தாய்மார்கள் 4 வேளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாம்பழம் சாப்பிட்டால் மாந்தம், வாழைப்பழம், தயிர் எடுத்துக் கொண்டால் சளிப்பிடிக்கும் என்பது உண்மையல்ல. முட்டை, இறைச்சி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். 1 கிராம் கால்சியம் தேவை என்பதால் 2 அல்லது 3 முறை பால் குடிக்கலாம். ரத்த சோகை இருந்தால் இரும்புச்சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.

எந்த உணவுகளை உட்கொண்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்?

கருவாடு, பால் சுறா சாப்பிட்டால் பால் அதிகமாகச் சுரக்கும். பூண்டு, வெந்தயம் சுரப்பை உயர்த்தும் என்பது அலோபதி மருத்துவத்தில் கிடையாது. ஆனால் அவற்றால் பால் சுரப்பு அதிகரிக்கும் என்று நம்பும் போது அது நடக்கலாம். நம்பினாலே பால் சுரப்பு கணிசமாக உயரும்.

இதில் சமூகத்தின் பொறுப்பு என்ன?

வீட்டில் கணவன், பெற்றோர், மாமியார், உறவினர்கள் என அனைவரும் தாய்ப்பாலைக் கொடுக்கச் சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும். பால் இல்லாததால் தான் குழந்தை அழுகிறது என்று பயமுறுத்தக் கூடாது. பெற்றவளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

அன்பாகவும் அக்கறையாகவும் நடந்து கொள்ள வேண்டும். தாய் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருந்தாலே, பால் தானாய்ச் சுரக்கும்.

பால் கொடுப்பது என்பது தாயின் வேலை மட்டுமே அல்ல. இதை கணவனும் குடும்பத்தினரும் எண்ணிப் பார்த்து, தாயின் உடல், உள்ள உணர்வுகளைப் புரிந்து நடக்க வேண்டும். தாய்ப்பால் முறையாகக் குழந்தைக்குச் சென்று சேர்வதை இறுதி செய்வோம். வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்தை உறுதி செய்வோம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H