ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன்
வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை
புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த
வேண்டியது இருக்கிறது.
ஆசிரியர்கள் மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்துவது எப்படி?
ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்களின்
வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே திட்டமிட்டு, அட்டவணைப்படி
வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களை
தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த (2020-21)
கல்வி ஆண்டு இதுவரை இல்லாத புதுவிதமான ஒன்றாக அமைந்து இருக்கிறது. எந்தவித
திட்டமிடலுக்கும் உட்படாத ஒன்றாக மாறி இருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ்
காரணமாகி விட்டது. அதுவே, கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில்
மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது.
இது ஆசிரியர்களுக்கு எளிதாக இருந்தாலும், பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு
சேர்ப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியாது.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும்
படிப்பு தடைபட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம்,
சந்திப்பு, கலந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக
ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.
இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது.
எனவே மாணவ மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும்
அத்தியாவசியம். அது இல்லை என்றால் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியம் இல்லாத
ஒன்றாக மாறி விடும்.
எனவே பெற்றோரின் பங்களிப்பால் தான் ஆன்லைன் கல்வியில் அனைத்து மாணவர்களும்
இணைய முடிகிறது. அதற்கு செல்போன், இணையதள இணைப்பு ஆகியவை இன்றியமையாத
ஒன்றாக இருக்கிறது. நவீன உலகில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு
மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப சாதனங்கள்
மாணவர்களின் கைகளில் தவழ தொடங்கி உள்ளது. எனவே அதை பயன்படுத்தவும் மாணவ
மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில்
பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க
வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது.
வீட்டுக்குள் வகுப்பறை சூழலை ஏற்படுத்து வது என்பது நடைமுறையில் இயலாத
ஒன்று தான். எனவே குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது
பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில்
நோட்டு, புத்தகம், பள்ளிச்சூழல், தேர்வு, சிறப்பு வகுப்பு, ஆசிரியரின்
கண்காணிப்பு போன்றவற்றில் இருந்து மாணவர்கள் விடுபட்டு உள்ளனர். இதனால்
அவர்களுக்கு கற்றலுடன் ஒரு தொடர்பற்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் தொடர்பை
ஏற்படுத்தி நாட்டத்தை ஏற்படுத்துவது முதல் கடமையாகி விட்டது.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி,
மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு
ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த
அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு
ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும்
சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது
இருக்கிறது. ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக
தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும்
மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில்
ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள்
என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும்
காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும்.