
சானிடைசர்
கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும்
அச்சுறுத்தலால் வழக்கத்தை விட அதிக முறை கை கழுவும் பழக்கம் பலரிடமும்
உருவாகி இருக்கிறது. நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை கொண்டிருப்பதால்
சானிடைசர்களும் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி இருக்கின்றன.
வெளியே எங்காவது செல்லும்போது சோப்பு கொண்டு கைகழுவ முடியாத பட்சத்தில்
சானிடைசர் பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
குறைந்தபட்சம் 60 சதவீதம் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை பயன்படுத்துவதுதான்
நல்லது. அவை கைகளை சுத்தம் செய்வதோடு சருமத்திற்கு பெரிய அளவில் தீங்கு
விளைவிக்காது. சானிடைசர்களின் தேவை அதிகரித்திருப்பதால் தரம் குறைந்த
சானிடைசர்களும் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. ஒருசில பரிசோதனைகள் மூலம்
சானிடைசரின் தரத்தை அறிந்துகொள்ளலாம்.
டிஸ்யூ பேப்பரின் நடுப்பகுதியில் பால் பேனா கொண்டு வட்டம் வரைந்துகொள்ள
வேண்டும். வட்டத்திற்குள் சானிடைசர் சில துளிகள் ஊற்றவும். அப்போது பேனா மை
மங்கி திட்டுத்திட்டாக பரவினால் அந்த சானிடைசர் தரமானது அல்ல என்பதை
கண்டறிந்துவிடலாம். சானிடைசர் தரமானதாக இருந்தால் வட்ட வடிவம் அப்படியே
இருக்கும். சானிடைசர் தெளித்ததால் ஈரப்பதமாகி இருக்கும் டிஸ்யூ பேப்பரும்
விரைவாகவே உலர்ந்துவிடும். அதனை கொண்டு அது தரமான சானிடைசர் என்பதை
உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
ஹேர்டிரையர் கொண்டும் சானிடைசரின் தரத்தை பரிசோதிக்கலாம். சிறிய
கிண்ணத்தில் சில துளிகள் சானிடைசர் ஊற்றிக்கொள்ளவும். அதனை ஹேர்டிரையர்
கொண்டு உலர வைப்பதற்கு முயற்சிக்கவும். ஐந்து வினாடிகளுக்குள் ஈரப்பதம்
ஏதுமின்றி சானிடைசர் துளிகள் உறிஞ்சப்பட்டிருந்தால் அது தரமான சானிடைசர்.
ஊற்றிய சானிடைசர் துளிகள் அப்படியே தண்ணீராக இருந்தால் அது தரமானது இல்லை
என்பதை அறிந்துகொள்ளலாம்.
சிறிதளவு கோதுமை மாவில் சானிடைசர் சில துளிகள் ஊற்றி சப்பாத்திக்கு மாவு
பிசைவதுபோல் பிசையவும். சானிடைசர் துளிகள் மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு
பதத்திற்கு மாறினால் அது தரமானது அல்ல. சானிடைசர் துளிகள் மாவுடன்
கலக்காமல் திரிதிரியாக உதிர்ந்தால் அது தரமானது.