இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 6 அமைச்சர்களும், அதேப்போல் புதுவை அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 28ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று குறையாததால் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கேட்டு 20 மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய மனுக்கள் இன்று நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீட் தேர்வை தள்ளி வைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுக்களை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். ஏற்கனவே மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்திருக்கிறோம். தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளோம். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இனி அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். நீட் தேர்வு தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுவிட்டதால் இந்த புதிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம், என நீதிபதிகள் தெரிவித்தனர்.. தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததால், நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 13ம் தேதி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.