இன்றைய சிந்தனை... இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 26 September 2020

இன்றைய சிந்தனை... இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?

இன்று ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாக மாறப் போவது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பின் ஏன் இந்த தலைப்புக் கேள்வி எழுந்தது என்றால் இன்று உப்புசப்பில்லாமல், ஊமைச்சனங்களாய், அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே.

அது போல் இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் மன்னர்களாவார்கள், எத்தனை பேர் அடிமைகளாக, ஆட்டுமந்தைகளாய் வாழ்ந்து மடிவார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் இந்த தலைப்புக் கேள்வி எழுந்திருக்க வேண்டும். மேலும் மன்னர்களாக உயர்பவர்களும் சரித்திரம் படைக்கும் மன்னர்களாக இருப்பார்களா இல்லை சரித்திரம் பழிக்கும் மன்னர்களாக இருப்பார்களா என்பதும் ஊகத்திற்குட்பட்ட விஷயமே. எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய வரலாறு படைக்கும் மன்னர்களாவது சாத்தியமா என்பது தான் நம் முன் நிற்கும் பெரிய கேள்வி.

இந்தக் கேள்விக்கு பதிலை ஒரு கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். எல்லாம் அறிந்த ஒரு முனிவர் ஒரு ஊரிற்கு வந்தார். பலரும் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலங்களை அறிந்து வந்தனர். ஒரு குறும்புக்கார இளைஞன் அந்த முனிவரால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்கத் திட்டமிட்டான். தன் உள்ளங்கையில் நடுவே ஒரு பட்டாம்பூச்சியை வைத்து இரு கைகளாலும் மூடியபடி அந்த முனிவரிடம் சென்றான்.

“முனிவரே. என் கையில் உள்ள பட்டாம்பூச்சி உயிருள்ளதா? உயிரற்றதா?” என்று முனிவரிடம் அவன் கேட்டான்.

அவர் அது உயிருள்ளது என்றால் கைகளால் அழுத்தி நசுக்கி அந்தப் பட்டாம்பூச்சியைக் கொன்று விட்டு ’பாருங்கள். உயிரில்லையே’ என்று சொல்ல நினைத்தான். அவர் அது உயிரற்றது என்று சொன்னால் அந்தப் பட்டாம்பூச்சியை ஒன்றும் செய்யாமல் கைகளைத் திறந்து பறக்க விட்டு “உயிருடன் இருக்கிறது பாருங்கள்” என்று சொல்ல நினைத்தான். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அந்த முனிவரால் சொல்ல முடியாத தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது தான் அவன் குறிக்கோள்.

அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அந்த முனிவர் புன்னகையுடன் சொன்னார். “அது உயிருடன் இருப்பதும், இறப்பதும் உன் விருப்பத்தைப் பொருத்தது”

அது போல இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாவதும், மண்ணாங்கட்டிகளாவதும் அவர்களுடைய எண்ணங்களையும், பண்புகளையும், ஈடுபாடு காட்டும் விஷயங்களையும், வாழும் முறைகளையும், மன உறுதியையும் பொருத்தது.

பதினாறு வயதில் அரபு வியாபாரிகளிடம் வேலைக்குச் சென்ற திருபாய் அம்பானி என்ற இளைஞன் மனதில் பெரியதொரு கனவிருந்தது. அந்தக் கனவை நனவாக்கும் மன உறுதியும் இருந்தது. அதை நனவாக்க என்ன விலையும் தரவும் அந்த இளைஞன் தயாராக இருந்தான். அந்த இளைஞன் இந்திய வணிகத்துறையில் முடிசூடா மன்னனாக மாறியதை சரித்திரம் இன்று சொல்கிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற குஜராத்தி இளைஞன் மனதில் சத்தியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருந்தது. ஒடிசலான உடல்பலமற்ற அந்த இளைஞன் வக்கீல் படிப்பு படித்த போதும் பெரிய வக்கீல் ஆகும் திறமை ஒன்றும் அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் அந்த இளைஞன் மனதில் இருந்த அந்த அசைக்க முடியாத உறுதி இந்திய மண்ணில் வேரூன்றி இருந்த ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தை வேரோடு பிடுங்கி எறிந்து சரித்திரம் படைத்தது. எத்தனையோ இளைஞர்கள் காந்தியடிகளால் கவரப்பட்டு விடுதலை வேட்கையுடன் சுதந்திரத்திற்காகப் போராட்டத்தில் குதித்தார்கள். ‘கத்தியின்றி, இரத்தமின்றி’ நடந்த ஒரே மிகப்பெரிய சுதந்திரப் போராட்டம் உலக சரித்திரத்தில் பதிவாகியது.

சிறுவனாக இருந்த போது முதல் முறையாக திசை காட்டும் கருவி (காம்பஸ்) ஒன்றைப் பார்த்து அதிசயித்தான் ஐன்ஸ்டீன் என்ற அந்த சிறுவன். எப்படி திசையை மாற்றினாலும் அதிலிருந்த முள் வடக்கு நோக்கியே நகர்ந்ததைக் கண்டு, அப்படி அதை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் அறியத் துடித்தான். அவனுடைய அந்த ஆவல் விஞ்ஞானத் துறை நோக்கி அவனைப் பயணம் செய்ய வைத்தது. இளமை முழுவதும் ஐன்ஸ்டீனுக்கு இருந்த அந்த அறிவியல் தாகம் சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக பின்னாளில் அவனை மாற்றியது. அது வரை இருந்த பல விஞ்ஞானக் கோட்பாடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு புதிய சரித்திரம் படைத்தார் ஐன்ஸ்டீன்.

இப்படி வியாபாரமாகட்டும், ஆட்சியாகட்டும், விஞ்ஞானமாகட்டும், வேறெந்த துறையுமாகட்டும் இளைஞர்கள் இளமைக் காலத்தில் தங்கள் மனதில் விதைத்த கனவுகள், சிந்தித்த சிந்தனைகள், உழைத்த உழைப்புகள் எல்லாம் சேர்ந்து தான் பெருத்த மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.

இளமைக்காலம் விதைக்கும் காலம். கவிஞர் கண்ணதாசன் இளமைக்காலத்தை “கற்பூரப் பருவம்” என்பார். அந்தப் பருவத்தில் எதுவும் சீக்கிரம் இளம் மனங்களில் பற்றிக் கொள்ளுமாம். அந்தக் காலத்தில் இளைஞர்கள் தங்கள் இதயங்களில் எதை விதைக்கிறார்கள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், எதை அடையப் பாடுபடுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால் அதைப் பொறுத்தே அவர்கள் எதிர்காலத்தில் மாறுகிறார்கள்.

இளைஞர் சக்தி உலகில் பிரம்மாண்டமான சக்தி. அந்த சக்தி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறதா, அழிவை நோக்கிப் பயன்படுத்தப்படுகின்றதா, பயன்படுத்தாமலேயே புதைந்து போகிறதா என்பதைத் தீர்மானிப்பதில் அவர்களுக்குக் கிடைக்கும் முன்மாதிரிகளுக்கும், அவர்கள் மனதில் பதியும் நிகழ்வுகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இராமேசுவரம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 16-8-1947 தேதிய தமிழ் நாளேட்டில்
நாட்டு மக்களுக்கு பண்டித நேரு விடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க உரை பதிவானதை மிகுந்த ஆர்வத்தோடு படித்தார். அந்தச் செய்திக்கு அருகிலேயே இன்னொரு செய்தியும் இருந்தது.
நவகாளியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக மகாத்மா காந்தி வெறும் காலுடன் நடந்து போய்க் கொண்டிருந்த படத்துடன் விவரித்திருந்த அந்த செய்தி அப்துல் கலாமை மிகவும் நெகிழ வைத்து விட்டது. தேசத்தந்தை என்ற நிலையில் செங்கோட்டையில் முதன்முதலில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டிய மனிதர் அதை விட்டு விட்டு பொது சேவையில் தன்னை அந்தக் கணத்தில் ஈடுபடுத்திக் கொண்டது பள்ளி மாணவர் அப்துல் கலாம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்ததாக அவரே ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். தன்னலமில்லா ஒரு விஞ்ஞானியாகவும், தலைவராகவும் பின்னாளில் அவர் உருவானதற்கான விதை என்று கூட அதைச் சொல்லலாம்.

“ரோமானியப் பேரரசின் ஏற்றமும், வீழ்ச்சியும்” என்ற நூலில் உலக நாகரிகத்தின் சிகரத்திற்கே சென்ற ரோமாபுரி மக்கள் உயர்ந்த விதத்தையும், வீழ்ச்சி அடைந்த விதத்தையும் வரலாற்றாசிரியர் மிக அழகாக விளக்குகிறார். வீழ்ச்சிக்கான காரணங்களை அவர் கூறும் போது முக்கியமான காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் மதுவிலும், ஆடம்பரங்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார்ந்த சிந்தனைகளையும், உழைப்பையும் கைவிட்டதைக் குறிப்பிடுகிறார். விதையாக இருந்தவை எவை, விளைச்சலாக நேர்ந்தது என்ன என்பது சிந்திக்க வேண்டிய செய்தி. எனவே இந்த இளைஞர் சக்தி இன்று எந்த நிலையில் இருக்கிறது. எப்படி பயன்படுத்தப் படுகிறது, பதப்படுத்தப்படுகிறது என்பதில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் மனித குலம் மேம்பட பயன்படுத்தப்பட்ட கல்வி இன்று அந்த ஆரம்ப நோக்கத்திலிருந்து நிறையவே விலகி விட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கும் விஷயம். இன்று கல்வி வேலை வாய்ப்புக்கான சாதனமாக மட்டுமே மாறி விட்டது. ஏராளமான தகவல்களை மாணவர்களுக்குள்ளே திணிக்கிறதே ஒழிய அவர்களுடைய பண்புகளை வளர்ப்பதில் அலட்சியமே
காட்டுகிறது. ஒரு காலத்தில் நல்ல விஷயங்களைச் சொல்ல நீதிப்பாடம் (Moral Science) என்று ஒரு பாடவகுப்பு இருந்தது. அதில் நீதிக்கதைகள், சான்றோர் பற்றிய செய்திகள், பெரியோர்களின்
வாழ்க்கை வரலாறெல்லாம் மாணவர்களுக்கு சொல்லித் தருவார்கள். இன்று அது போன்ற பாடவகுப்புகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

எந்த அறிவும் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்றால் எது நன்மை, எது தீமை என்ற சிந்தனை ஆழமாக மனதில் பதிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அழிவே விளையும் என்பதற்கு
இக்காலத்தில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அணுவைப் பிளந்து பெரும் சக்தியைக் கண்டு பிடிக்க விஞ்ஞானிகளால் முடிந்தது. ஆனால் அதை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்துவதை விட அதிகமாக அழிவுக்காக அல்லவா உலகம் அதிகம் பயன்படுத்துகிறது. அணுகுண்டாக விழுந்து அந்த அறிவு எத்தனை கோடி உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது.

இளம் வயதிலேயே எத்தனை இளைஞர்களை மதம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளை சிலர் உருவாக்கி அழிவை அரங்கேற்றுகிறார்கள். அந்த இளைஞர்களில் பலர் மிக நன்றாகப் படித்தவர்கள் என்பதை செய்தித்தாளில் படிக்கிற போது நம் மனம் பதைக்கிறது. மனிதத்தன்மையைக் கூட அவர்கள் கற்ற கல்வியால் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லையே!

கவிஞர் கண்ணதாசன் குறள் வடிவில் ஒரு முறை நகைச்சுவையாக எழுதினார்.

கற்காலம் நோக்கி கற்றவரை ஓட்டுவதே
தற்கால நாகரி கம்!

ஆனால் நம் முன்னோர் கல்வியை தகவல்களைச் சேர்க்கும் சாதனமாக நினைத்ததில்லை. சம்ஸ்கிருதத்தில் “தத் த்வித்யம் ஜன்மா” என்ற வாக்கியம் உண்டு. இதற்கு ’கல்வி இரண்டாம் பிறப்பு போன்றது’ என்று பொருள். படிப்பது இன்னொரு முறை பிறப்பது போல், புதுப்பிறவி பெறுவது போல் மேன்மையானது என்று நம் முன்னோர் நினைத்தார்கள். கல்வி கற்றவனை மேம்படுத்தி மற்றவனையும் மேம்படுத்தப் பயன்பட வேண்டும். அப்படிக் கல்வி கற்ற இளைஞர்களே வரலாறு படைக்கும் நாளைய மன்னர்களாகப் பரிணமிக்க முடியும்.

அப்படி இல்லாமல் வெறும் பட்டப்படிப்பு சான்றிதழுக்காகவும், வேலைக்காகவும் கற்கும் கல்வியை வைத்து நம் நாட்டில் இத்தனை பேர் கல்வி பெற்று விட்டார்கள் என்று புள்ளி விவரம் சொல்வது பேதைமை. கற்ற கல்வி நம்மைப் பண்படுத்தா விட்டால், சமூகத்திற்குப் பயன் தருவதாக இல்லா விட்டால் அந்தக் கல்வியால் என்ன பயன்?

இக்காலக் கல்விமுறை பெரிதும் ஒருவரைப் பண்படுத்தப் பயன்படுவதில்லை என்ற போதும் நாம் மனம் தளர வேண்டியதில்லை. இக்காலக் கல்வியின் உதவியில்லா விட்டாலும் சிந்திக்க முடிந்த, நன்மை தீமை என்று பகுத்தறியக் கூடிய நல்ல இளைஞர்கள் இன்றும் கணிசமான அளவில் உள்ளார்கள் என்பது ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். அவர்களுக்கு நல்ல முன்மாதிரிகள் இருந்தால், வழி நடத்தக் கூடிய பண்பாளர்கள் இருந்தால் அவர்கள் பெரும் சாதனையாளர்களாக கண்டிப்பாக மலர்வார்கள்.

நல்ல முன்மாதிரி என்று சொல்லும் போது நமக்கு அப்துல் கலாம் நினைவு தான் வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று மாணவர்களை சந்திக்கும் வழக்கம் உள்ள அவர் இளைய
சமுதாயத்தில் பெரும் நம்பிக்கை வைத்து இருக்கிறார். அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசும் அவருக்கு இளைய சமுதாயத்தின் நாடித் துடிப்பை உணர முடிகிறது. அவர் அனுபவம் இன்றைய இளைஞர்கள் நாளைய நல்ல மன்னர்களாக மாறுவது சாத்தியமே என்று சொல்கிறது.

ஆனால் இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் வேலையை அப்துல் கலாம் போன்றவர்களுக்கு ஒதுக்கி விட்டு மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது. நம் பங்கிற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வது முக்கியம். எத்தனையோ இளைஞர்கள் வேர்களை மறந்து அலைகிறார்கள். எந்திரம் போல வாழ்கிறார்கள். தீவிரவாதம் போன்ற அழிவுப் பாதையில் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நம்மால் முடிந்த வரை நல்ல முன்மாதிரிகளாக இருக்க முயற்சிக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் நாணயமான, பொறுப்புணர்வுள்ள மனிதர்களாக நாம் நடந்து கொண்டாலே போதும்.

நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து வாழ்ந்தால் அது நல்ல சிந்தனை அலைகளை நம்மை சுற்றி ஆரம்பித்து வைக்கும். அந்த அலைகளால் உங்கள் வீட்டிலோ, நீங்கள் இருக்கும் பகுதியிலோ ஒரு இளைஞர் ஈர்க்கப்பட்டு நல்ல விதத்தில் மாறினாலும் அது பெரும் வெற்றியே. நம்மில் ஒவ்வொரு மனிதராலும் இப்படி நல்ல அலைகளை அனுப்ப முடிந்தால், இளைய சமுதாயத்திடம் நல்ல விதைகளை விதைக்க முடிந்தால் அதன் அறுவடையாக இன்றைய இளைஞர்களை நாளைய வரலாற்றை மேன்மையான முறையில் எழுதும் மன்னர்களாக நாம் காண முடிவது நூறு சதவீதம் சாத்தியமே..!!

💗வாழ்க வளமுடன்💗

பகிர்வு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H